புதுச்சேரி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியில் இன்று (மே 15, 2026) பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

அதன்படி, புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.99 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 96.26-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று உயர்ந்து ரூ. 99.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 2.92 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ. 86.47-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 89.39-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கெனவே சில நாடுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மேற்காசியாவில் போர் நிலவி வரும் நிலையில் வீட்டிலிருந்து வேலை, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்துதல் போன்ற பல வேண்டுகோள்களை அவர் விடுத்தார். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அடுத்த 2-3 வாரங்களுக்கு இந்த போர் தொடர்ந்தால், மேலும் ஒன்று அல்லது இரண்டு எரிபொருட்களின் விலை உயர்வுகளை நாம் காணக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு எரிபொருள் விலை 100 ரூபாயை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.