Claim: அகிலேஷ் யாதவ் ராமர் கோவிலை மூடி விடுவேன் என்று கூறியதற்காக அவர் மீது செருப்பு வீசப்பட்டது

Fact: இத்தகவல் தவறானது. அவர் அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், அவரை வரவேற்கும் விதமாக அவர் மீது மாலைகள் வீசப்பட்டன.

ராமர் கோயிலை மூடிவிடுவேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதற்காக அவர் மீது செருப்பு வீசப்படுவதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அகிலேஷ் யாதவை வரவேற்கும் விதமாக அவர் மீது மாலைகள் வீசப்பட்டது தெரியவந்தது.

ராமர் கோயில் தொடர்பாக பரவும் பொய்யான தகவல்:

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியில் குறிப்பிடப்பட்டிருந்த “@VIKASHYADAVAURAIYAWALE” என்ற வார்த்தையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடினோம். அப்போது, “ஜெய் சோசலிசம் ஜெய் அகிலேஷ்” என்ற கேப்ஷனுடன் 2024ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை Vikash Yadav என்ற இன்ஸ்டாகிராம் பயனர் நல்ல தரத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனை ஆய்வு செய்கையில் அகிலேஷ் யாதவ் மீது வீசப்படுவது பூ மற்றும் மாலைகள் என்பது தெரியவந்தது. இதே காணொலியை, “மலர் மாலைகளுடன் வரவேற்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்” என்ற கேப்ஷனுடன் News24 ஊடகமும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, அவர் ராமர் கோயிலை மூடிவிடுவேன் என்று கூறினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது. மாறாக, பாஜகவிற்கு பூட்டுப்போடப்படுமே தவிற ராமர் கோயிலுக்கு அல்ல என்று கிண்டலாக உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாக ABP Hindi ஊடகம் 2024ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ராமர் கோயிலை மூடிவிடுவேன் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதற்காக அவர் மீது செருப்பு வீசப்படுவதாக வைரலாகும் காணொலியில் உண்மையில்லை என்றும் அவர் மீது வீசப்படுவது மலர் மாலைகளே என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அவர் ராமர் கோயிலை மூடிவிடுவேன் என்ற கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.