EV Discounts: 2025-26 நிதியாண்டு இறுதியை முன்னிட்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார் உற்பத்தியாளர்கள் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளனர்.

மின்சார கார்களுக்கு ரூ.5.2 லட்சம் வரை சலுகை:

2025-26 நிதியாண்டு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நாட்டின் மின்சார கார் உற்பத்தியாளர்கள், தங்களது கையிருப்பில் உள்ள மாடல்களை விற்று தீர்க்க அதிரடியான முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளனர். அதன்படி, கார்ப்ரேட் சலுகைகளை அள்ளி வீசுவதன் மூலம், தங்களது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் சலுகைகள் மூலம், ரூ.1.8 லட்சம் தொடங்கி ரூ.5.2 லட்சம் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

அதிரடி டிஸ்கவுண்டிற்கான காரணம் என்ன?

மின்சார வாகன விற்பனை அதிகரிப்பதற்கு வரிச் சலுகைகள் ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் 2025-26 நிதியாண்டில் வணிக பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்படும் மின்சார கார்களுக்கு, முதல் ஆண்டிலேயே 40 சதவிகிதம் வரை தேய்மானம் கணக்கிடப்பட்டு வரி விலக்கை கோரலாம். அதேநேரம், இந்த தேய்மான வரி விலக்கானது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 40 சதவிகிதம் என்பது முதல் ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும். இந்த தேய்மானத்திற்கான சலுகையானது நிறுவனங்களின் வரி சுமையை கணிசமாக குறைக்க உதவுகிறது. இந்த சலுகையானது வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எந்தெந்த நிறுவனங்களின் கார்களுக்கு சலுகை..

கிட்டத்தட்ட அனைத்து கார் உற்பத்தியாளர்களுமே தங்களது மாடல்களுக்கான சலுகைகளை வழங்குகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவிகிதம் வரை விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டாடா, மஹிந்த்ரா, JSW MG மோட்டார்ஸ், வின்ஃபாஸ்ட், BYD, கியா இந்தியா மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் குறுகிய கால சலுகைகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களை குறிவைக்கும் சலுகைகளை பின்பற்றுகின்றன. வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் தங்களது பயன்பாட்டிற்கான கார்களை மின்சார யூனிட்களாக மாற விரும்பும் நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த சலுகை வழங்கப்படுகிறது.

நிதியாண்டு முடிவதற்குள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை முடிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, கொள்முதல் சலுகைகளுடன் உரிமையாளர் சலுகைகளையும் இணைத்து மார்ச் மாத சலுகைகளை உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சில ப்ராண்டுகள் தங்கள் வாகன பிரிவை மின்சாரமயமாக்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, பொது சார்ஜிங் அணுகல், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் போன்ற கூடுதல் உரிமையாளர் சலுகைகளையும் அள்ளி வீசியுள்ளன.

பிற நிறுவனங்கள் வழங்கும் சலுகை..

பல உள்நாட்டு மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்கள் நிதியாண்டு இறுதியில் வலுவான விற்பனையை பதிவு செய்ய முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். இது தேய்மான நன்மைகள் மற்றும் மின்சார கார்களின் குறைந்த இயக்க செலவுகளை அடையாளப்படுத்துகிறது. வாகன உற்பத்தியாளர்கள் விளம்பரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதக் கவரேஜ் மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் போன்ற உரிமைச் சலுகைகளையும் வழங்குகின்றனர்.

டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள், டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களிலிருந்து மாறுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுடன் பெருநிறுவனங்கள் சார்ந்த சலுகைகளை முன்வைத்துள்ளன. அவை முன்பண செலவுகளைக் குறைத்து எளிய நிதி கட்டமைப்புகளை வழங்குகின்றன.