தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக இதுவரை எந்த கட்சிக்கும் தொகுதிகளை ஒதுக்கவில்லை.

இடையூறு தரும் பாஜக:

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், ஃபார்வர்ட் ப்ளாக், புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சியினர் அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி அளித்து வருகின்றன். குறிப்பாக, தொகுதிப் பங்கீட்டில் பாஜக-வின் தலையீடு அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.

எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 11.7 சதவீதம் வாக்குகளைப் பெற்ற பாஜக இந்த சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக-விற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக எதிர்த்து வந்த தினகரன் அவருடன் தற்போது கைகோர்த்துள்ள நிலையில், அமமுக 10 தொகுதிகளை கேட்டு வருகிறது.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி 5 இடங்களையும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும், பூவை ஜெகன் மூர்த்தியாரின் புரட்சி பாரதமும் தலா 3 தொகுதிகளை கேட்டு வருகின்றனர். கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான பாமக இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்து உள்ளது. ஃபார்வர்ட் ப்ளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலா 1 இடங்களை கோரி வருகின்றனர்.

150 தொகுதிக்கு மேல் அதிமுக?

கூட்டணி கட்சிகளே சுமார் 50 இடங்களுக்கு மேல் தொகுதிகளை எதிர்பார்ப்பதால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறையும் சூழல் உருவாகியுள்ளது. சுமார் 160 முதல் 180 தொகுதிகள் வரை இரட்டை இலை சின்னத்தை களமிறக்க முடிவு செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதற்கு தடைக்கல்லாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் என்ற நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிடக்கூடாது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. அமித்ஷா, பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீட்டில் அதிகளவு இடையூறு அளிப்பதாகவும் அதிமுக தரப்பினர் வேதனையில் உள்ளனர்.