தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இடம்பிடித்துள்ளது.

பலவீனமாக உள்ள அதிமுக கூட்டணி:

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பிடித்தது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், பாமக-வில் நடக்கும் ராமதாஸ் - அன்புமணி சண்டையும் கூட்டணியை பலவீனப்படுத்தி வருவதாகவும் அதிமுகவினர் கவலை கொண்டுள்ளனர்.

அமித்ஷாவின் கருத்து:

இந்த நிலையில், டெல்லியில் இருந்து கொண்டு அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுக பாஜக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து கூறி வருவதும், மத்திய அமைச்சர் எல்.முருகன் அமித்ஷா சொல்வதுதான் வேதவாக்கு என்று கூறுவதும் அதிமுக-வினருக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி வருகிறது.

உள்ளே வருவாரா விஜய்?

இந்த நிலையில், தற்போதுள்ள சூழலில் அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்த ஆளுங்கட்சியான திமுகவை உள்ளே கொண்டு வர தமிழ்நாட்டில் புதியதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய்யை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கொள்கை எதிரி பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் வரை விஜய் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாக உள்ளது. இதனால், சில அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் அதிமுக மீது அரசியல் தாக்குதலோ, விமர்சனமோ செய்யாத விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், அதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுங்கள் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எடப்பாடியின் முடிவு என்ன?

ஆனால், அது நடைமுறையில் சாத்தியமா? என்பது எடப்பாடி பழனிசாமியின் முடிவிலே உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு பெரிய தேர்தலில் இதுவரை எந்த வெற்றியையும் அதிமுக பெறவில்லை. இதனால், வரும் சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருடனான மோதல் போக்கு உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தனது கூட்டணியை பலப்படுத்த கூட்டணியில் மிகவும் வலுவான கட்சி இருக்க வேண்டியது அவசியம் என்றே பலரும் கருதுகின்றனர்.

அரசியல் சதுரங்கம்:

பாஜக தலைவர்கள் அதிமுகவினருக்கு கட்டளையிடும் விதமாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருவதும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இவர்களது கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு விஜய்யை கொண்டு வருவதில் மும்முரம் காட்ட நடவடிக்கை எடுக்க பலரும் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி வருகின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? இதே கூட்டணியை தொடர்வாரா? விஜய்யை உள்ளே கொண்டு வர வியூகம் வகுப்பாரா? என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரிய வரும். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதல் திமுக-வையும், பாஜக-வையும் மட்டுமே மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.