என்னுடைய மறைவிற்கு பின்னரும் நூறு ஆண்டுகளுக்கு அதிமுக வலிமையாக இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. ஆனால், இன்று அதிமுக என்ற மாபெரும் இயக்கம் கடற்கரையில் கட்டிய மணல் வீடு மாதிரி கரையத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படமால் இங்கிருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்ற ஜென் மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி மீது எரிச்சலில் தொண்டர்கள்

கட்சியின் தளகர்த்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில் கரைத் தட்டிய கப்பலாய் தள்ளாடிக்கொண்டிருக்கும் அதிமுகவை, கலங்கரை விளக்கமாய் இருந்து காக்க வேண்டியவர், கரைத் தட்டினால் என்ன, கப்பலில் கல் விழுந்தால் என்ன என்று இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் எரிச்சலையும் மனக்குமுறலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எத்தனை தோல்விகள் வந்தாலும், சறுக்கல்கள் வந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல அதனை எதிர்த்து நின்று, நெருப்பாற்றில் நீந்தி, கட்சியை காப்பாற்றி, ஆட்சியை மீண்டும், மீண்டும் பிடித்தவர் ஜெயலலிதா, அவர் மாதிரி இல்லையென்றாலும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் கட்சியை காப்பாற்ற, அதிருப்தியில் பிரிந்து செல்பவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்த, ஒரு சிறு மெனக்கிடலையும் எடுக்காமல், ஐம்பது வயதுகளை கடந்த அதிமுக மகளிர் அணியை அழைத்து ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. அதைவிட கொடுமை என்னவென்றால், கட்சியை விட்டு போகிறவர்களையெல்லாம் கண்ட மேனிக்கு சமூக வலைதளங்களில் வசைபாட வைப்பதற்கென புது டீமை அமைத்திருக்கிறார் அவர்.

கட்சியை காப்பாற்ற முயற்சிக்காத எடப்பாடி

அதிமுகவிற்கு புத்துயிர் ஊட்ட வேண்டுமென்ற எண்ணமோ, மீண்டும் ஆட்சியை பிடித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியமோ துளியும் இல்லாத எடப்பாடி பழனிசாமி, இருக்கும் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு பேருக்கு கட்சி நடத்த தயாராகிவிட்டார் என்பதே அவருடைய நடவடிக்கைகள் காட்டுகின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இன்னொரு மதிமுகவாகவும் அதிமுக

இப்படி எல்லோரும் கட்சியை விட்டு போய்விட்டால் என்ன செய்வது? என அதிமுகவின் சீனியர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேட்டபோது ‘வைகோ கட்சி நடத்தல? மதிமுக மாதிரி நடத்திட்டு போறேன். போறவங்க, போகட்டும். என்று விடாப்படியாக நின்றிருக்கிறார். ஆலமரம் போல அசைக்க முடியாத சக்தியாக இருந்த அதிமுகவை, இன்று மதிமுக மாதிரி நடத்திக்கொள்கிறேன் என்று சொல்வதற்கும் தனி தைரியம், ஒரு கெத்து வேண்டும். தலைக்கு தில்ல பாத்தியா? என்று இதற்கும் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்கள்.

குமுறலில் அதிமுக விசுவாசிகள் – கவலைப்படமால் இருக்கும் எடப்பாடி

காலங்காலமாக திமுக எதிர்ப்பில் வளர்ந்த கட்சி, ஆட்சியை அலங்கரித்த இயக்கம், ஆலமரம் மாதிரி அசையாமல் நிற்பதற்கு பதில், அரச மரை இலை மாதிரி உதிர்ந்து சருகாகிக்கொண்டிருப்பதை நினைத்து, அந்த கட்சியே கதி என களத்தில் உயிரை கொடுத்து உழைத்த ரத்தத்தின் ரத்தங்கள்தான் குமுறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அதிமுக பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படமால் இருக்கும் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள் இரட்டை இலையை கையிலும் நெஞ்சிலும் பச்சைக் குத்தியிருக்கும் உண்மையான அதிமுக விசுவாசிகள்.

உரக்கச் சொன்னால் எடப்பாடிக்கு கேட்டுவிடுமா?

இதற்கு பின்னரும் எடப்பாடி பழனிசாமி மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக இருந்தால், மிச்சம், மீதி இருக்கும் அதிமுகவும் அடியோடு காலியாகிவிடும் என்பதை யாராவது சென்று அவர் காதில் உரக்கச் சொல்லுங்கள் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். உரக்கச் சொன்னால் மட்டும் அவருக்கு கேட்டுவிடப் போகிறதா என்ன? என இன்னொரு பக்கம் கேட்கிறார்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்.