தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையை இணைக்கக்கூடிய, பல்வேறு பிரதான சாலைகள் உள்ளன. அந்த வகையில் சென்னைக்கு முக்கியச்சாலையாக, பழைய மகாபலிபுரம் சாலை (OMR Road), கிழக்கு கடற்கரை சாலை (ECR Road) உள்ளது. சென்னையின் மிக முக்கியச்சாலையாக இது இருந்தாலும், இரண்டு சாலைகளுக்கும் இணைப்புச் சாலைகள் மிக குறைவாக உள்ளது. இரண்டு சாலைகளுக்கும் முறையான இணைப்பு சாலை இல்லாதது, வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை OMR–ECR link road project

கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் பிரதான இணைப்புச் சாலை இல்லாததால், சிறிய சாலைகள் வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அந்த சாலைகள் குறுகியதாக இருப்பது மிகப்பெரிய பிரச்சினை ஆகவும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு இணைப்புச் சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது.

இணைப்புச் சாலை அமைவிடம் ?

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கம் - நீலாங்கரைக்கு இடையிலான துரைப்பாக்கம் பகுதியில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. துரைப்பாக்கம் பல்லாவரம் ரேடியல் சாலையில், பக்கிங்காம் கால்வாய் மீது இரும்பு பாலத்துடன் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. 204.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக முதற்கட்டமாக, ஓ.எம்.ஆர் சாலை பக்கம், 800 மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியது. குறிப்பாக 3.2 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். தற்போது பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் வேகம் எடுத்த பணிகள் !

பிரச்சனைகள் தீர்ந்ததை தொடர்ந்து, ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை திட்டத்தில் எஞ்சியுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது கட்டப் பணிகளை தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் மீது நான்கு மீட்டர் உயரத்திற்கு சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னையின் முதல் இரும்பு பாலம் கட்டப்பட உள்ளது. சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் அமைய உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில், நீலாங்கரை அருகே 680 மீட்டர் நீளத்திற்கு அதன் பிறகு சாலை அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டத்தின் பயன்கள் என்ன?

தற்போது திருவான்மியூர், சோழிங்கநல்லூர் என இரண்டு இடங்களில் பாலங்களுடன், இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இணைப்பு சாலைகளை அடைய, பல கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளது. இந்த இடத்தை அடைய வேண்டுமென்றால், 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவிட வேண்டிய சூழல் உள்ளது. சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு, இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எளிதாக செல்ல முடியும். குறிப்பாக இந்த பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி ஊழியர்கள் உள்ளதால் அவர்களுக்கும் இந்த சாலை வரப் பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பணிகள் நிறைவடைவது எப்போது ? - ECR-OMR Link Road status

டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் இறுதிக்குள் பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற மார்ச் மாதம் (2026க்குள்) அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.