Drugs Crime: மும்பையை சேர்ந்த நபரிடமிருந்து போதைப்பொருளை வாங்கும்போது, தனியார் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

மருத்துவமனை சிஇஒ கைது:

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் விலைக்கு வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான நம்ரதா சிகுருபதி எனும் அந்த பெண், மும்பையை சேர்ந்த வன்ஷ் தாக்கர் எனும் நபரிடமிருந்து வந்த கொக்கைன் பார்சலை வாங்கும்போது சிக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நம்ரதா உடன் பார்சலை கொண்டு வந்த பாலகிருஷ்ணா எனுபவரையும் கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாட்ஸ்-அப்பில் கொக்கைன் ஆர்டர்

தாக்கரை வாட்ஸ்-அப் வாயிலாக நம்ரதா தொடர்புகொண்டு கொக்கைன் வேண்டும் என தகவல் தெரிவித்ததோடு, அதற்காக ரூ.5 லட்சம் பணத்தை ஆன்லைனில் செலுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “மருத்துவரான நம்ரதா மும்பையை சேர்ந்த தாக்கரிடம் கொக்கைனை ஆர்டர் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் உள்ளது. ராயதுர்கம் எனும் பகுதியில் வைத்து, தாக்கர் அனுப்பிய பாலகிருஷ்ணா என்பவரிடமிருந்து போதைப்பொருள் பார்சலை நம்ரதா பெற்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பார்சலில் 50 கிராம் கொக்கைன் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.70 லட்சத்திற்கு கொக்கைன்:

இதுதொடர்பான தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம், 53 கிராம் கொக்கைன் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். தேசிய போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 8(c) உடன் 21(b) மற்றும் 27 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்ரதா மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். விசாரணையின்போது, தற்போது வரையில் கொக்கைனுக்காக ரூ.70 லட்சம் வரை செலவழித்துள்ளதாக நம்ரதா வாக்குமூலம் அளித்துள்ளாராம். இதனிடையே தலைமறைவாக உள்ள தாக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்பெயினில் வந்த பழக்கம்:

ஸ்பெயினில் MBA பயிலும்போது தனக்கு கொக்கைன் பழக்கம் ஏற்பட்டதாக, காவல்துறை விசாரணையில் நம்ரதா தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில் எம்.டி. முடித்த பிறகு, ஸ்பெயினுக்கு மேற்படிப்பிற்காக சென்றதாகவும், அங்கு வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் அவ்வப்போது கொக்கைன் உட்கொள்ள தொடங்கியுள்ளார். இந்தியா திரும்பிய பிறகு, அவர் அந்த பழக்கத்தை தொடர்ந்துள்ளார். ஒமேகா எனும் மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குனராகவும் நம்ரதா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.