இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட்டில் பலரும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் பள்ளி முதலே பலரும் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தி வருகின்றனர். குஜராத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஒரே இன்னிங்சில் 498 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

498 ரன்களை குவித்த சிறுவன்:

குஜராத்தில் பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் செயின்ட் சேவியர் லயோலா பள்ளிக்கும் ஜே.எல். இங்கிலீஷ் பள்ளிக்கும் பல்லுபாய் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

காந்திநகரில் உள்ள ஷிவாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் த்ரோனா தேசாய் என்ற 18 வயது சிறுவன் அபாரமாக பேட்டிங் செய்து 498 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அவர் மொத்தம் 320 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள் 86 பவுண்டரிகளை விளாசினார். இவரது அபார பேட்டிங்கால் இவரது செயின்ட் ஷேவியர் பள்ளி இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யார் இந்த த்ரோனா தேசாய்?

இந்த சாதனை குறித்து பேசிய த்ரோனா தேசாய் தனக்கு 500 ரன்கள் அருகில் நெருங்கியது தனக்குத் தெரியாது என்றும், ஸ்கோர்போர்ட் இல்லாத காரணத்தாலும், தன்னடைய அணியும் தனக்கு தெரியாததாலும் தனக்கு ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், இந்த ரன்களை குவித்தது தனக்கு மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.

த்ரோனா தேசாய் ஏற்கனவே 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவருக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைத்தது. சச்சின் டெண்டுல்கரே தனது முன்னுதாரணம் என்றும் த்ரோனா தேசாய் கூறியுள்ளார். சமீபகாலமாக சிறுவர்கள், இளைஞர்கள் பலரும் கிரிக்கெட் போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளான ரஞ்சி, துலீப் டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் என பல வடிவ கிரிக்கெட் போட்டிகளும், ஐ.பி.எல்., டி.என்.பி.எல். போன்ற அதிரடி டி20 தொடர்களும் உள்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பலரும் வருவாய் ரீதியாகவும் திறமை ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.