Donald Trump: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு நேரடியாக குடியுரிமை வழங்கும் சட்டத்தை, கைவிட டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, வரும் ஜனவரி 20ம் தேதி அவர் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்து டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ட்ரம்பின் பரப்புரை மேலாளர் சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 67 வயதான வைல்ஸ், அமெரிக்க வரலாற்றில் இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார்.

ட்ரம்ப் பெருமிதம்:

தேர்தல் வெற்றிக்கு பிறகு, “வைல்ஸ் பற்றி பேசியிருந்த ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றிகளில் ஒன்றை அடைய எனக்கு சுசி வைல்ஸ் உதவினார். எனது 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பரப்புரைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக அவர் இருந்தார். வைல்ஸ் கடினமானவர், புத்திசாலி, புதுமையானவர் மற்றும் உலகளவில் போற்றப்படுபவர் மற்றும் மதிக்கப்படுபவர்” என தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள துணை அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள வான்ஸ், “ அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக பெண் தலைமை அதிகாரியாக சூசி இருப்பது தகுதியான மரியாதை" என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த சூசி வைல்ஸ்?

மே 14, 1957 இல் பிறந்த சூசி வைல்ஸ் ஒரு முக்கிய கால்பந்து வீரராகவும் விளையாட்டு வீரராகவும் இருந்த பாட் சம்மரலின் மகள் ஆவார். புளோரிடாவை தளமாகக் கொண்ட அரசியல் ஆலோசகரான இவர், முன்பு ரொனால்ட் ரீகனின் 1980 அதிபர் தேர்தல் பரப்புரையிலும் பணியாற்றியுள்ளார். புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸ் 2018 தேர்தலில் வெற்றிபெறவும் உதவியுள்ளார். தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், வைல்ஸ் குடியரசுக் கட்சியின் அமெரிக்க பிரதிநிதிகளான ஜாக் கெம்ப் மற்றும் டில்லி ஃபோலர் ஆகியோருக்காகவும் பணியாற்றியுள்ளார். வைல்ஸ் முன்னாள் யூட்டா கவர்னர் ஜான் ஹன்ட்ஸ்மேன் ஜூனியரின், 2012 அதிபர் பரப்புரைக்கான மேலாளராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார். டிரம்பின் 2016 மற்றும் 2020 தேர்தல் பரப்புரையிலும் சூசி வைல்ஸ் மூத்த ஆலோசகராக பணியாற்றினார் .

குழந்தைகளுக்கான குடியுரிமைக்கு செக்

எதிர்காலத்தில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தானாகவே குடியுரிமை வழங்கும் முறை ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முன்னெடுப்பு மசோதா ஒன்று, ட்ரம்ப் மற்றும் வான்ஸின் அதிகாரப்பூர்வ பரப்புரை இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “குறைந்தது ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஃபெடரல் முகமைகளுக்கு அறிவுறுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் பதவியேற்கும் முதல் நாளிலேயே, ட்ரம்ப் கையெழுத்திடுவார் எனவும் கூறப்படுகிறது. இந்த செய்தி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான குடியேறிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.