வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து, தேர்வர்கள் தங்களின் வாக்கைச் செலுத்தலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சிகளும் அசுர வேகத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால்..

இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு நமக்குப் பிடித்த கட்சிக்கு வாக்கு அளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டைதான் (Voter ID) வாக்களிக்க தேவையான முக்கிய ஆவணம் என்றாலும், அது இல்லாதவர்களும் வாக்களிக்கும் உரிமையை இழக்க வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

என்னென்ன மாற்று ஆவணங்கள்?

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று இருப்பவர்கள், மாற்று அடையாள ஆவணங்களின் மூலம் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தலாம்.

ஆதார் அட்டை,

ரேஷன் அட்டை,

பாஸ்போர்ட்,

ஓய்வூதிய அட்டை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) அட்டை,

வங்கி அல்லது அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகம்,

ஓட்டுநர் உரிமம்,

பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு அரசு அங்கீகரித்த ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள், பொதுத்துறை நிறுவன ஊழியர் அடையாள அட்டைகள், எம்.பி., எம்.எல்.ஏ. அடையாள அட்டைகள் போன்றவையும் செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டைகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

எதற்காக இந்த முன்னெடுப்பு?

இந்த நடவடிக்கை, அனைத்து தகுதியான வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக உரிமையை சுலபமாக பயன்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்கவும், அனைவரும் வாக்களிக்கச் செல்லும் முன் தங்களிடம் ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டியதை உறுதி செய்வதும் முக்கியம் ஆகும்.

கூடுதல் சந்தேகங்களுக்கு

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வாக்காளர்கள் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளான நாளை (ஏப்ரல் 23, 2026) மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து ஜனநாயக விழாவை வெற்றிகரமாக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.