விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிக்கு ஆய்வுக்கு செல்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் ஆங்கிலம் குறித்து பேசி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பள்ளி மாணவி ஆங்கிலம் பேச திணறுவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உளவியல் வன்முறையை அந்த மாணவி மீது அமைச்சர் கீர்த்தனா கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்க திமுக மகளிரணியின் நிர்வாகி யாழினி, அமைச்சர் கீர்த்தனாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

யாழினி சொன்னது என்ன ?

பள்ளிக்கு செல்வதற்கு முன்னதாகவே ஆங்கிலத்தில் பேசச் சொல்லி கேட்க வேண்டும், மனப்பாடம் செய்துதான் மாணவர்கள் படிக்கிறார்கள் என்று ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டும் என்ற முன்முடிவோடுதான் அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிக்கு சென்றிருக்கிறார் என்றும் சமூக புரிதல் உள்ள சாதாரண மனிதர் கூட அரசு பள்ளிக்கு சென்று உங்களது தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ள யாழினி, அந்த குழந்தைக்கு அப்பா இல்லாமல் இருந்திருந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்லும்போது அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை குறைந்தப்பட்சம் யோசித்தாரா அமைச்சர் கீர்த்தனா? அல்லது அவரது தந்தை செய்யும் பணி குறித்து சொல்வதற்கு அந்த குழந்தைக்கு சங்கடமாக இருந்தால் அந்த குழந்தையின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்றாவது சிந்தித்தாரா? எனவும் கேட்டுள்ள யாழினி. சமூக புரிதல் அற்றவர்களை அமைச்சர்களாக நியமித்தால் இப்படிதான் அபாண்டம் நிகழும் என்றும் குறிப்பிட்டியிருக்கிறார்.

பயத்தில் கைக் கட்டிய குழந்தைகள் ; ஆட்டிட்ட்யூட் காட்டிய அமைச்சர்

அதே நேரத்தில், அமைச்சர் கீர்த்தனாவின் கேள்விகளுக்கு அந்த குழந்தைகள் தைரியமாக பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கீர்த்தனாவின் நடவடிக்கைகளாலும் அவரது தோரணையாலும் அந்த மாணவிகளுக்கு அச்சம் ஏற்பட்டு, கைக்கட்டி பேச ஆரம்பித்தார்கள் என்றும், யாரும் யாரிடமும் கைக் கட்டி நிற்கக் கூடாது என்று சொல்லிக் கொடுத்த திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்நாட்டில் மாணவர்களை கைக்கட்டச் சொல்லி அவர்களை அச்சுறுத்துவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் யாழினி கேட்டிருக்கிறார்.

கூலி என்று சொன்னபோது உடைந்த குழந்தையின் குரல்

அதோடு, அந்த குழந்தையின் உன்னுடைய அப்பா என்ன செய்கிறார் என்று அமைச்சர் கீர்த்தனா கேட்கும்போது, என்னுடைய அப்பா ஒரு கூலி என்று அந்த மாணவி பதில் சொல்லும்போது அவரது டோன் குறைந்ததை கூட கவனித்து அந்த குழந்தையை தேற்ற முயற்சிக்காத அமைச்சர் கீர்த்தனா, மீண்டும் அந்த குழந்தையிடம் ஆரியையை அழைத்து ஆங்கிலத்தில் உரையாட சொல்லி நிர்பந்திக்கிறார். இது அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது. அப்போது அந்த மாணவியின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்? என்று கேட்டிருக்கிற யாழினி தவறு செய்தாலும் பரவாயில்லை அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள் என்று சொல்லிக்கொடுக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசை பார்த்து கொஞ்சமாவது கற்றுக்கொள்ளுங்கள் அமைச்சர் கீர்த்தனா என்றும் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விக்டிம் கார்ட் ப்ளே செய்யும் கீர்த்தனா

மேலும், மாணவிகளிடம் அவர் நடந்துகொண்ட விதம் தவறு என்று இந்த நேரம் வரை உணராத அமைச்சர் கீர்த்தனா, அதற்கு பதில் நான் அரசு பள்ளியில் படித்த மாணவி என்பதுபோன்ற விக்டிம் கார்டை ப்ளே செய்கிறார் என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.