பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் சிறப்பாக கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூடுதல் போக்குவரத்துத் தேவையைச் சமாளிக்கும் வகையில், இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

* தாம்பரம் – மானாமதுரை இடையே கூடுதல் சிறப்பு ரயில் (06159/06160)

தாம்பரம் – மானாமதுரை இடையே 06159 என்ற எண் கொண்ட சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை மாலை 4.35 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரையை அடையும்.

இதன் மறுமார்க்க ரயிலான 06160, நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடையும்.

*தாம்பரம் – மானாமதுரை இடையே சிறப்பு ரயில் (06161/06162)

தாம்பரம் – மானாமதுரை இடையே 06161 என்ற எண் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06162 என்ற எண் கொண்ட ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 3.45 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்த இரு ரயில்களும் தலா ஒரு சேவையாக இயக்கப்படும்.

* திருச்சி – தாம்பரம் ஒருவழி சிறப்பு ரயில் (06192)

திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் 06192 என்ற எண் கொண்ட ஒருவழி முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் காலை 11.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலும் ஒரு சேவையாக இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர் – திருச்சி ஒருவழி சிறப்பு ரயில் (06191)

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் 06191 என்ற எண் கொண்ட ஒருவழி முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் ஒரு சேவையாக இயக்கப்படும்.

*சென்னை எழும்பூர் – திருச்சி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06193/06194)

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே 06193 என்ற எண் கொண்ட சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06194 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை இரவு 10.45 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

12 பெட்டிகளுடன் இயக்கம்

மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களாக இயக்கப்பட உள்ளன. பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மற்றும் நிறுத்த விவரங்களைச் சரிபார்த்துப் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.