Demonte Colony 2 Review in Tamil :

2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

கதைக்கரு :

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்று சொன்னால், முந்தைய பாகத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், புதிய கதையை படமாக எடுத்து வைப்பார்கள். அது பேய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, கதை சற்று வேறுபட்டு இருந்தாலும் பழிவாங்கும் படலம் மட்டும் மாறவே மாறாது. டிமான்டி காலனி 2 படத்தை பொறுத்தவரை, பழைய டெம்ப்ளேட் பின்பற்றப்படவில்லை, அதுதான் ப்ளஸ்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்ரீனிவாசன் இறக்காமல் இருப்பதே இந்த பாகத்திற்கான ஓபனிங். அவரை யார் காப்பாற்றினார்கள், எதற்காக காப்பாற்றினார்கள், டிமாண்டி யார், முதல் பாகத்தில் வந்த செயினின் பின்னணி என்ன என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்.

புது முயற்சி :

பேய் படம என்றால் அழகான மோகினிகள், சிரிப்பூட்டும் பேய்கள், பழிவாங்குவதற்காக பிளாஷ் பேக்கில் நடந்த மோசமான சம்பவம், இடையில் சம்பந்தமில்லாமல் பாடல் அதற்கு ஒரு டான்ஸ் என இவ்வளவு காலமாக தமிழ் சினிமா இதைதான் காட்டி வந்தது.

டிமாண்டி 2 படம், சற்று மாறுப்பட்டதாகவே இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனைதான் இப்போது நடக்கும் அனைத்தும் விஷயங்களும் காரணமாக இருக்கிறது. அதை சஸ்பென்ஸாக வைத்து, அது தொடர்பான சம்பவங்களை ஒவ்வொரு நிமிடமும் நம்மை சீட்டின் முனையில் உட்கார வைத்து கதை கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து.

2009, 2015, 2021 என வெவ்வேறு ஆண்டுகளில் கதை நகர்கிறது. முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் ஒன்று சேர முன்னும் பின்னும் காலம் கடந்து அழைத்து சென்றுள்ளனர்.

நடிப்பு எப்படி ?

கதாநாயகன் அருள் நிதி வழக்கம்போல் போதுமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சில சீன்களில் வந்த பின் காணாமல் போகும் பிரியா பவானி ஷங்கர், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதையின் முக்கிய பாத்திரமாக இருக்கிறார். இவர்கள்போக, சார்பட்டா முத்துக்குமார், அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி உள்ளிட்டோர் ஏகபோகமாக நடித்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 7 புகழ் அர்ச்சனாவின் நடிப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம்.

ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன?

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் கதையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்தான். ரசிகர்களுக்கு தான் சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சஸ்பென்ஸாகவும் சொல்லியுள்ளார். லாஜிக் ஓட்டைகளில் சிக்கிக்கொள்ளாமல் படம் தப்பித்துவிட்டது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தூண்களாக அமைந்து, படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளனர்.

மற்றபடி மைனஸ் என்றால் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சரியில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

அடுத்து என்ன ?

முதல் பாகத்தை போல் இந்த பாககும் நம் மனதில் பல்வேறு கேள்விகளை விட்டு செல்கிறது. அதற்கான பதில் அடுத்த பாகத்தில் கிடைக்கும் என்பதையும் படத்தின் க்ளைமாக்ஸில் காட்டிவிட்டு படத்தை முடித்துவிட்டனர்.

தியேட்டரில் பார்க்கலாமா?

தொடர் விடுமுறை நாளில் வெளியாகியுள்ள இந்த ஹாரர் திரில்லர் படத்தை அனைத்து வகையான ரசிகர்களையும் நிச்சயம் ஈர்க்கும். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் யார் வேண்டுமானலும் படத்தை பார்க்கலாம். திக் திக் காட்சிகளை பார்த்து அலறுபவர்கள் இதை தவிர்த்துக்கொள்வது நல்லது.