தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் பிரபலமான நடிகர் டெல்லி கணேஷ். இவர் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய், அஜித் மாதிரி வரணும்:

டெல்லி கணேஷ் ஒரு முறை தனியார் யூடியூப் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மரணம் என்பது நிரந்தரம். யாரும் அதில் இருந்து தப்ப முடியாது. ஆனால், சில மரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். சினிமாவில் வெற்றி என்பது தேவை.

இல்லை என்றால் வாழ்க்கையில் வெறுத்துவிடுவார்கள். எல்லாரும் ரஜினி மாதிரி கமல் மாதிரி எல்லாம் வரணும்னு நினைக்க முடியாது. நினைச்சாலும் வர முடியாது. ஆசை இருக்கலாம். நம்ம நினக்கனும். அஜித் மாதிரி வரனும். விஜய் மாதிரி வரனும்னு நினைக்கலாம். நினைச்சாதான் நாம ஓரளவுக்காவது வருவோம். அவர் எல்லாம் வர முடியாது. நம்ம எல்லாம் வர முடியாது அப்படிங்கு தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. அதை தூக்கி எறிஞ்சுட்டு நாம் வருவோம். நமக்கு ஒருநாள் இருக்கு. நமக்கு ஒரு இடம் இருக்கு. கண்டிப்பா வருவோம் அப்படினு நினைச்சா வருவோம்.”

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நாயகன், காமெடின், வில்லன்:

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் 1977ம் ஆண்டு பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் 3 வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பார்.

கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ரஜினியுடனும் ராகவேந்திரா, பொல்லாதவன், மூன்று முகம், பாபா என பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் மட்டுமின்றி விஜயகாந்த், பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், கார்த்தி, விஜய், அஜித் என பலருடன் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்கள் நடித்துள்ளார். இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.