ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணி பெறும் 3ஆவது வெற்றி இதுவாகும். ஏற்கனவே, பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துவிட்டது. இருப்பினும், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி:

நடப்பு ஐபிஎல் சீசன், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் அஜின்கியா ரகானே, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, களத்தில் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல, அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னுக்கு அவுட்டானார்.

பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழந்த கொல்கத்தா:

இருப்பினும், கேப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளுக்கு 48 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மனீஷ் பாண்டே, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 ரன்கள் எடுத்திருந்தபோது, ரசல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179 ரன்களை எடுத்தது. இதனால், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆயுஷ் மாத்ரே, டேவன் கான்வே ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐபிஎல்-இல் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் படேல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த அவர் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மறுமுனையில் விக்கெட்டும் சரிந்து கொண்டிருந்தது.

அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் பிரேவிஸ், கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தார். 25 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்த அவரும் அவுட்டாகி வெளியேறிய நிலையில், சென்னை அணி பரிதாபமான சூழலில் சிக்கியது.

பின்னர், தோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடிய துபே 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், தோனி அடித்த சிக்ஸ் போட்டியை சென்னை அணி பக்கம் திருப்பியது.

19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை அணி. இதன் மூலம், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழக்க செய்திருக்கிறது.