UP Crime: உத்தரபிரதேசத்தில் 43 வயது பெண்மணி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையுடன், தனது மகளின் மாமனாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தொடரும் விநோத காதல்:

உத்தரபிரதேசத்தில் நிகழும் சம்பவங்கள் தேசிய அளவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு கஸ்கஞ்ச பகுதியை சேர்ந்த 10 குழந்தைகளுக்கு தந்தையான ஷகீல் என்பவர், 6 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதுவும் தனது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட, மாப்பிள்ளையுடன் ஷகீல் ஓட்டம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்மையில் அலிகாரை சேர்ந்த அப்னா தேவி என்பவர், தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் வீட்டை விட்டு ஓடி அதிர்ச்சி தந்தார். இந்நிலையில் தான், தனது மகளின் மாமனாருடன், 43 வயது பெண் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நடந்தது என்ன?

படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திரா என்ற பில்லுவுடன் ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது. தான் லாரி டிரைவர் என்பதால் மாதத்திற்கு இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவதாகவும், அந்த நேரத்தில் எனது மனைவி சம்மந்தியை வீட்டிற்கு அழைத்து பழகி வந்ததாகவும் மம்தாவின் கணவரான சுனில் குமார் தெரிவித்துள்ளார். அதோடு, சைலேந்திரா தங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன்னை வேறு அறையில் சென்று படுக்கும்படி மம்தா வலியுறுத்தியதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

மகளின் மாமனாருடன் காதல்:

மம்தாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் ஒருவரான மகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் அரங்கேறியுள்ளது. அவரை தொடர்ந்து சம்மந்தியான 46 வயது சைலேந்திராவுடன் மம்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது திருமணத்தை மீறிய உறவாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தான், “வெளியூர்களுக்கு லாரி ஓட்டுச் செல்லும் தான் அவ்வப்போது வீட்டிற்கு பணத்தை அனுப்பி வந்தேன். ஆனால், தான் இல்லாத இந்த நேரங்களில் சைலேந்திராவை வீட்டிற்கு அழைத்து எனது மனைவி அவருடன் உறவு கொண்டுள்ளார். தற்போது வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்” என்று சுனில் குமார் புகாரளித்துள்ளார். வாரத்தின் ஒவ்வொரு மூன்றாவது நாளும் தனது தாய் சைலேந்திராவை வீட்டிற்கு அழைப்பார் என்று மம்தாவின் மகன் தெரிவித்துள்ளார். சைலேந்திரா உறவினர் என்பதால் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதை நாங்கள் சந்தேகிக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் குறிப்பிடுகின்றனர். நள்ளிரவில் அங்கு வரும் சைலேந்திரா அதிகாலையில் மம்தா வீட்டில் இருந்து சென்று விடுவார் என்றும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுனில் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.