Crime: மீன் குழம்பிற்காக நண்பனை அடித்தே கொன்ற இரண்டு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீனிற்காக கொடூர கொலை..

மும்பையை சேர்ந்த இரண்டு நண்பர்கள் தங்களது குடியிருப்பில் சமைத்த மீனை தனியொரு ஆளாக தின்றுவிட்டதாக கூறி, சக நண்பரை அடித்து, கல்லை கொண்டு தலையை நசுக்கி கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டது அப்சர் எனும் நபர் என்பது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரது நண்பர்களான சுரேஷ் மற்றும் ராஜேஷ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் மும்பையின் கோரேகானில் உள்ள அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.

நண்பர்களிடையே மோதல் - நடந்தது என்ன?

மூன்று பேரும் சேர்ந்து வசித்து வந்த வீட்டில், சம்பவத்தன்று மீன் சமைத்துள்ளனர். அப்போது, அப்சர் எனும் பாதிக்கப்பட்ட நபர் மது அருந்தியுள்ளார். உணவு தயாரித்த பிறகு கலைப்பில் மூன்று பேரும் உறங்கியுள்ளனர். சுரேஷும், ராஜும் எழுந்தபோது மீன் குழம்பு சமைத்த பாத்திரம் முழுவதுமாக காலியாக இருந்துள்ளது. இதனால் மதுபோதையில் இருந்த அப்சர் மீது சந்தேகம் கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வார்த்தைகள் தடிக்க, இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஆத்திரத்தில் கல்லை கொண்டு அடித்ததில் படுகாயமடைந்த அப்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்த சுரேஷும், ராஜும் சம்பவ இடத்தில் இருந்து ஹரியானாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

2 பேரையும் கைது செய்த போலீசார்..

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இரண்டு பேரையும் தேட தொடங்கியுள்ளனர். சுரேஷ் ஹரியானாவின் கைதாலில் வசிப்பவர் என்றாலும், ராஜேஷ் நேபாளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் இருவரும் குப்பைகளை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இருவரிடமும் மொபைல் போன் அல்லது எந்த அடையாள ஆவணங்களும் இல்லாததால் விசாரணையில் சிக்கல் நீடித்துள்ளது. இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 குப்பை சேகரிப்பாளர்களை விசாரித்த பிறகு, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்தனர் சுரேஷ் ஹரியானாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், ராஜேஷ் ஒரு ரயில் நிலையத்தில் பிடிபட்டார்.

மீனை சாப்பிட்டது யார்?

விசாரணையில் ராஜேஷ் ஏற்கனவே கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணையின் முடிவில், பிரச்னைக்கு காரணமாக மீனை அப்சர் உண்ணவில்லை என்பது உறுதியாகியுள்ளது. வீட்டில் சுற்றி திரிந்த எலிகள் தான் மீனை தின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில் இருந்த ஒரே காரணத்தால், அற்பமான காரியத்திற்காக நண்பரையே இருவர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.