Crime: ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்கு சென்ற பெண் மருத்துவர், ஹரியானாவில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண் மருத்துவர் பலி:

ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது மருத்துவ பட்டதாரியான பவானா யாதவ், டெல்லியில் முதுகலை மருத்துவப் படிப்புக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில், ஹரியானாவின் ஹிசார் பகுதியில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்த பாவனாவின் தாயார் தனது மகளை உயர் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வாராந்திர தேர்வுக்காக டெல்லியில் இருந்த மாணவி ஹிசாருக்கு எப்படி வந்தார் என்பது தெளிவாகத் தெரியாததால், அவரது மரணத்தைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

யார் இந்த பாவனா?

சம்பவம் தொடர்பான பாவனாவின் தாயார் காயத்ரி யாதவ், ஜெய்ப்பூரில் பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அது விசாரணைக்காக ஹிசார் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாவனா யாதவ் 2023ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் தனது இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். அதன்படி, அவர் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வுக்குத் தயாராகி வந்தார். இது இந்தியாவில் மருத்துவ சிகிச்சிகளை வழங்க அளிக்கும் உரிமத் தேர்வாகும். இந்த தேர்வானது வெளிநாட்டில் மருத்துவம் பயின்று உள்நாட்டில் மருத்துவராக செயல்பட விரும்புவோருக்கு கட்டாயமாகும்.

டெல்லியில் பயிற்சி:

பாவனாவின் அம்மா அளித்த புகாரின்படி, 25 வயதான அந்த பெண் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு, தேர்வுகளுக்காக வாரந்தோறும் டெல்லிக்கு பயணம் செய்து வந்தார். ஏப்ரல் 21 ஆம் தேதி, அவர் ஒரு தேர்வுக்காக டெல்லியில் இருந்தார். டெல்லியில், பாவனா சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் தனது சகோதரியுடன் தங்கியிருந்தார். ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில், பாவனா தேர்வுக்காக அங்கு சென்று இருந்தார். ஏப்ரல் 23 ஆம் தேதி, பாவனா தனது அம்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு 24 ஆம் தேதி காலைக்குள் திரும்பி வருவதாகக் கூறினார், ஆனால் முன்பு எப்போதும் அவர் அப்படி செய்ததில்லை. ஏப்ரல் 24 ஆம் தேதி, உமேஷ் யாதவ் என்ற நபர், பாவனாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாவனாவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு, ஹரியானாவின் ஹிசாரில் உள்ள சோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பயங்கரம் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

தகவலறிந்ததும், காயத்ரி ஹிசாரை அடைந்தார். பாவனா எங்கு கண்டுபிடிக்கப்பட்டார் அல்லது அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவமனையில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனிடையே, அவரது காயங்களின் தீவிரம் காரணமாக, 25 வயதான பாவனா ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

தனது மகளின் வயிற்றில் கூர்மையான ஆயுதக் காயங்கள் இருந்ததாக பாவனாவின் தாயார் கூறியுள்ளார். மேலும், தனது மகளை கத்தியால் குத்தி பின்னர் தீ வைத்து கொளுத்தியதாகவும், இது அவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாவனாவின் மடிக்கணினி, மொபைல் போன் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நடந்தது என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.