மு.க.ஸ்டாலின் பேசியதற்கும் இப்போது திமுக வெளிப்படுத்தும் கருத்திற்கும் சம்பந்தமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆளும் கட்சியாகவும், திமுக எதிர்க்கட்சியாகவும் மாறியது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் விசிக, இ.யூ.மு.லீக், காங்கிரஸ் ஆகியவை அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த சூழலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் தெரிவித்திருந்தார். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தவெக அரசை சரமாரியாக திமுகவும், அக்கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விமர்சித்து வருகின்றனர். இது அரசியல் களத்தில் கடும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திமுகவை கண்டித்துள்ளார்.

ராஜபாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், “மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் மே 5ம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் 3 கட்சி தலைவர்களும் சந்தித்தோம். மே 4ம் தேதி மாலையில் சிறப்பாக ஆளும் கட்சியாக இருந்தோம். இனி சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு குறித்து நேரடியாக சந்தித்தபோது நான் பாராட்டு தெரிவித்தேன்.

அதற்கு மு.க.ஸ்டாலின் என்னிடம், “நான் நேற்றைக்கு தெரிவித்தது தான் திமுகவின் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம். ஒரு 6 மாத காலம் போகட்டும். விஜய் எப்படி ஆட்சி நடத்துகிறார் என்பதைப் பார்க்கலாம். அதன்பிறகு தவெக ஆட்சியில் இருக்கக்கூடிய குறைகளை, குற்றங்கள் சம்பந்தமாக நம்முடைய நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பதை தீர்மானிப்போம் என சொன்னார்.

ஒரு கட்சி தோற்பது வேறு விஷயம். ஆனால் முதலமைச்சராக இருந்த ஒருவர் தோற்பது பெரிய விஷயம். கவலைக்குரிய ஒன்று தான். தொகுதிக்கு நல்லது செய்தால் ஜெயித்து விடலாம் என இனி யாரும் சொன்னால் நம்பாதீர்கள். கொளத்தூரை விட அதிகமாக தொகுதிக்கு செய்த எம்.எல்.ஏ.,வை வேறு எங்கும் பார்க்க முடியாது. கொளத்தூரைப் பார்த்தாலே அந்த தொகுதி எப்படி வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.

மு.க.ஸ்டாலின் தோற்ற நிலையில் அவருக்கு ஆறுதல் சொல்ல இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் சென்றோம். ஆனால் அன்று அவர் சொன்னதற்கும், இன்று திமுகவில் இருந்து வெளிப்படுத்தக்கூடிய கருத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒவ்வொன்றிலும் குறை சொல்கிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஒவ்வொரு வாக்குறுதியும் உடனடியாக நிறைவேற்றவில்லை. கால அவகாசம் எடுத்துக் கொண்டதை என்னால் கூற முடியும். இதில் பொறுமை என்பது மக்களுக்கு தேவைப்படுகிறது” என சண்முகம் தெரிவித்துள்ளார்.