90களில் வெளியான மெலினா படத்தின் மூலம் ஹாலிவுட்டையே கிறங்கடித்தவர் பிரபல நடிகை மோனிக்கா பெலூச்சி. அந்த பெயரில் ஒரு எனர்ஜி கிடைப்பது போலவே ரசிகர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில், அவரது பெயரிலேயே ஒரு பாடல் இன்று வெளியாகி கோலிவுட்டையே ஆட்டம் போட வைத்திருக்கிறது. தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் மோனிகா மோனிகா என்றே பித்து பிடித்து அலைய தொடங்கி விட்டனர்.

ரூ.1,000 கோடி வசூல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் ஷாஹிர், அமீர்கான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். விக்ரம் படத்தை போன்றே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் கண்டிப்பாக 1,000 கோடி கலெக்சனை அள்ளும் என்றும் படக்குழு நம்பிக்கை வைத்திருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

டி.ஆர். குரலில் சிக்கிட்டு பாடல்

ஏற்கனவே கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளனர். சமீபத்தில் டி.ஆர்.குரலில் வெளியான சிக்கிட்டு பாடலும் ரசிக்கும் படி இருந்தது. இந்த பாட்டின் லிரிக் வீடியோவில் டி.ஆர். தனது ஸ்டைலில் துள்ளலான ஆட்டம் போட்டார். அதில், அனிருத், சாண்டி ஆகியோரும் செம வைப் மோடை செட் செய்தார்கள். இந்த ஆட்டம் அடங்குவதற்குள் கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது.

மோனிகா.. லவ் யூ மோனிகா

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூலி படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி இன்று மாலை 6 மணிக்கு வெளியான மோனிகா பாடல் ரசிகர்களை மதி மயங்க வைத்திருக்கிறது. பின்னனி பாடகி சுபாஷினி குரலில் இருக்கும் கிறக்கமும், கடலுக்கு நடுவில் நடிகை பூஜா ஹெக்டேவின் ஆட்டமும் ரொம்ப ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிகப்பு கவுனில் வந்து மோனிகாவாக கவர்ந்து இழுக்கிறார். பாடலின் வரிகளும் அனிருத்தின் இசையும் சமூகவலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. மோனிகா ஐ லவ்யூ மோனிகா என்று தொடங்கும் பாடல் அடுத்த காவாலா ஹிட் வரிசையில் இடம்பெறும் என்றே ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டுள்ளனர்.

பாராட்டை அள்ளும் செளபின் ஷாஹிர்

மோனிகா பெல்லூசி கடலில் வந்தாச்சு, கடலே கொந்தளிக்கும் சுனாமியே வந்தாச்சு என்று தொடங்குகிறது. பிறகு லிரிக்கின் நடுவில் நிலவை சிவப்பாக்கும் தஞ்சாவூர் காரி போன்ற வரிகளும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடலில் மலையாள நடிகர் செளபின் ஷாஹிர் ஆட்டமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டேவுக்கு இணையாக்க ஆட்டம் போட்டிருக்கிறார். பாடலின் கடைசி நிமிடங்களில் அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்களே ஸ்டன் ஆகி போனதாக தெரிவிக்கின்றனர். மோனிகா பாடல் மூலம் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.