சுதந்திர தின கொண்டாட்டமாக கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது ரஜினிகாந்த் நடித்த கூலி. சூப்பர்ஸ்டார் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்தில் அவருடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ். செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் கூலி:

ஏ சான்றிதழ், கலவையான விமர்சனங்கள் என கூலி படத்திற்கு சில தடைகள் வந்தாலும் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் கூலி படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். கூலி படம் வெளியாகி கடந்த 3 வாரத்தில் அதாவது கடந்த 18 நாட்களில் இந்தியாவில் மட்டும் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

கடந்த புதன்கிழமை வந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் கூலி படம் ஓரளவு வசூல் செய்தது. அன்றைய நாளில் மட்டும் இந்தியாவில் ரூபாய் 4.85 கோடி வசூலை எட்டியது. வார விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை ரூபாய் 2.8 கோடியும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுமார் 3 கோடியும் கூலி படம் வசூல் செய்துள்ளது.

இதுவரை வசூல் எவ்வளவு?

இந்தியாவில் மட்டும் இதுவரை கூலி படம் ரூபாய் 279 கோடியை தற்போது வசூல் செய்துள்ளது. அதில், தமிழில் மட்டும் ரூபாய் 177.08 கோடியை வசூல் செய்துள்ளது. தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கில் கூலி படம் நல்ல வசூலை எட்டியுள்ளது. நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடித்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தெலுங்கில் மட்டும் கூலி திரைப்படம் ரூபாய் 60 கோடியை வசூல் செய்துள்ளது. இந்தியில் வெளியான ஹ்ரித்திக் ரோஷன் - ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த வார் திரைப்படத்திற்கு போட்டியாக இந்தியிலும் நல்ல வசூலை கூலி குவித்துள்ளது. இந்தியில் மட்டும் இந்தியாவில் கூலி படம் 36 கோடி ரூபாயை தற்போது வரை வசூல் செய்துள்ளது. படக்குழுவின் கணிப்பின்படி உலகளவில் கூலி படம் ரூபாய் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளிலும் வசூல்:

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூலி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலை கூலி படம் குவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு ரஜினியையும், கமல்ஹாசனையும் இணைத்து ஒரு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.