திருச்சியில் இன்று முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்ற நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இருதொகுதிகளிலும் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் விதிகளின்படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக தொடர முடியும் என்பதால் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற அன்றே திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட சொல்லாமல் விஜய் ராஜினாமா செய்து விட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் முதலமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் மூலம் நிச்சயம் மக்களை சந்திக்க வருவேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் ஜூன் 1ம் தேதியான இன்று அந்த மக்கள் சந்திப்பானது நடைபெறவுள்ளது.

இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பா?

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இந்நிகழ்ச்சியானது மாலை 4 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் பின் சாலை மார்க்கமாக 7 கிலோ மீட்டர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லவுள்ளார். வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர். முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

விஜய் ராஜினாமாவால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இன்றைய கூட்டத்தில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையவாசிகள் கடும் விமர்சனம்

இந்த நிலையில் திருச்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR கோடுடன் கூடிய அனுமதி அட்டை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற யாருக்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இணையவாசிகளிடையே கடும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

காரணம் தேர்தலுக்கு முன்பு தான் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இது திமுகவின் சதி, தவெகவை முடக்க காவல்துறையை ஏவி விடுவதாக விஜய் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சென்ற இடமெல்லாம் விஜய் குற்றம்சாட்டினார்.

Also Read: CM Vijay: வெற்றி கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?

தற்போது தேர்தல் முடிந்து அதே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. இப்போது காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருந்தும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பது என்ன கணக்கு?.. அப்போ இதெல்லாம் திமுக சதி என சொன்னது பொய்யா? என இணையவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் இப்போதும் இது திமுகவின் சதி என சொல்லுங்களேன் என விமர்சித்துள்ளார்கள்.

எந்த ஆட்சியாக இருந்தாலும் காவல்துறைக்கு சட்டம் ஒழுங்கும், மக்கள் உயிரும் மிக முக்கியம். பணியில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டாலும் எதிர்பாராத விளைவுகள் உண்டாகி விடும் என்பதால் தான் காவல்துறை எந்தவொரு நிகழ்ச்சிக்கும் திட்டமிடுதல் தொடங்கி செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் வரை தகவல் பெற்று அனுமதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறார்கள். இதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய் புரிந்து கொள்வாரா என்ற கேள்வியெழுப்பியுள்ளனர்.