நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தவெக அரசு வெற்றி பெற்றது. இந்த இரண்டு தொகுதியிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது எம்.ஜி.ஆர். மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்களில்கூட எம்ஜிஆர் அவர்களின் பெயரையோ புகழையோ பேசியதில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

எம்ஜிஆர், கருணாநிதி செய்தது இல்லை

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இந்திய அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான காந்தி, நேரு, இந்திரா காந்தி போன்றோரின் படங்களை பாஜக பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாஜக தலைவர்களின் படங்களைக் காங்கிரஸ் பயன்படுத்துவதில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் படங்களையும் அகில இந்திய அளவில் மாற்றுக் கட்சியினர் பயன்படுத்துவதில்லை. தமிழகத்திலும் அகில இந்தியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இதே அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எம்.ஜி.ஆர். அவர்களின் படத்தை திமுகவும், கருணாநிதி அவர்களின் படத்தை அதிமுகவும் இதுவரை பயன்படுத்தியதில்லை. விஜயகாந்த் அவர்கள்கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை; அவர் தன்னை மட்டுமே முன்னிறுத்தினார்.

இதையும் படிங்க: CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்

அரசியல் மோசடி?

ஆனால், தன்னை மட்டுமே முன்னிறுத்தினால் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், அதிமுகவைத் தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படத்தை AI மூலம் சித்தரித்து, அதிகாரப்பூர்வ IT Wing பக்கத்தில் பதிவிடுவது அரசியல் மோசடியல்லவா? விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் நடித்த திரைப்படங்களில்கூட எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரையோ புகழையோ பேசியதில்லை. ஜெயலலிதா அம்மா அவர்களுடனும் அவருக்கு நல்லுறவு இருந்ததில்லை. விஜய் அவர்களின் குடும்பத்தினர் திமுக ஆதரவாளர்களாகவே கருதப்பட்டனர்.

அதிமுக தலைமையின் பலவீனமா?

அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரிய மோசடிச் செயல்களில் ஈடுபடுவது அதிமுக தலைமையின் பலவீனமா? அல்லது த.வெ.க.வினரின் மோசடியா? கள்ள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் சினிமா பிளாக் டிக்கெட் விற்பனையாளர்களின் பாணியில், வாக்குத் திருட்டில் ஈடுபடும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.எது எப்படி இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்குத் தகுந்த எதிர்வினையாற்றி, உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.