Citroen C3X Coupe: பசால்ட் காரை விட புதிய C3X கூபே அதிக அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையை பிடிக்க சிட்ரோயன் தீவிரம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் சிட்ரோயன் நிறுவனம் தடுமாறி வருகிறது. இந்நிலையில் தான் ”Citroen 2.0 - Shift Into The New” எனும் புதிய திட்டத்தை இந்தியாவிற்கான முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட கார் மாடல்கள், சந்தை விரிவாக்கம் மற்றும் உள்ளூர் இணைப்பிற்கு முக்கியத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இன்ஜின் மற்றும் மின்சார அடிப்படையிலான கார்களுக்காக நிறுவனம் கூடுதலாக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சி, மேம்பாடு, உள்ளூர்மயமாக்குவது மற்றும் உற்பத்தி பணிகளுக்காக சுமார் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்:

கார் மாடல்களின் அணுகலை மேம்படுத்துவதற்காக சில்லறை விற்பனை தளங்களின் எண்ணிக்கையை 80 ஆக உயர்த்தியுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் தர நகரங்களையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்தவொரு பயனருக்கும் காரின் விற்பனை மற்றும் சேவைக்கான அணுகல் 100 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டக்கூடாது எனவும் சிட்ரோயன் முடிவு செய்துள்ளது. இதுபோக பயனர்களுக்கான சேவையை மேம்படுத்த டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் சேவை அமைப்பும் நடைமுறையில் இருப்பதாக சிட்ரோயன் தெரிவித்துள்ளது.

C3X கூபேவை டீஸ் செய்த சிட்ரோயன்:

இந்த சூழலில் தான் சிட்ரோயன் சார்பில் அடுத்ததாக உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய காருக்கான டீசரை, நிறுவனத்தி பிராண்ட் அம்பாசிடரான தோனி வெளியிட்டுள்ளார். அதன்படி, C3X கார் மாடல் இந்திய சந்தைக்கு தயாராகி வருவதை காட்டுகிறது. ஆனால், அதன் அடிப்படையிலான நிறுவனத்தின் பசால்ட் கார் மாடல் ஏற்கனவே உள்ளூரில் விற்பனையில் இருக்கும் சூழலில், புதிய காரின் வருகை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கூடுதல் அம்சங்களூடன் புதிய வேரியண்டாக அது சந்தைப்படுத்தப்படக்கூடும். எஸ்யுவிக்களை போன்றே அதிகப்படியான கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டு, ஃபாஸ்ட்பேக் ஸ்டைலிங்கை பெறக்கூடும். இதனால் மிட்சைஸ் செடான்கள் மற்றும் எஸ்யுவிக்கள் உடன் புதிய C3X கார் மாடல் போட்டியிடக்கூடும்.

C3X கூபே - அம்சங்கள், வசதிகள்

புதிய C3X கூபேவானது பசால்டின் பிளாட்ஃபார் மற்றும் வடிவமைப்பை அப்படியே பின்பற்றும் என கூறப்படுகிறது. அதன்படி,இரட்டை ஹாரிசாண்டல் கோடுகளுடன் கூடிய செவ்ரான் லோகோ, டெயில்கேட்டில் C3X பேட்ஜ், பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் க்ளஸ்டர், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் ORVMs, 360 டிகிரி கேமரா செட்டப், டூயல் டோன் ரெட் & பிளாக் ஷேட், பம்பர் இன்செர்ட்ஸ் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் இடம்பெற்று இருப்பதை டீஸர் காட்டுகிறது. நாட்ச்பேக் ஸ்டைல் டெயில்கேட்டை பிரதிபலிக்கும் விதமான ஸ்லப்பிங் ரூஃப்லைன் கொண்டுள்ளதால் இதன் பூட் திறன் பெரியதாக இருக்கும். பெரிய அலாய் வீல்களை பெறுவதோடு, கரடுமுரடான வடிவமைப்பை பெறக்கூடும். கூடுதலாக, 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, முற்றிலும் டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெறலாம்.

C3X கூபே - இன்ஜின் உள்ளிட்ட இதர தகவல்கள்

சொகுசான பயணம் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற திறனை கொண்ட வாகனமாக C3X உருவாக்கப்படுகிறது. அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதில் இடம்பெறலாம். இருப்பினும், சிட்ரோயனின் வழக்கமான முறைப்படி, இதன் விலை மிகவும் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இதன் விலை 10 முதல் 16 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.