மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் கோலாகலம் இன்று திக் விஜயம் - ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

சித்திரைத் திருவிழா

மதுரை உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து. தினமும் மீனாட்சி அம்மன். சுந்தரேவரர் ப்ரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு அரசியாக முடி சூட்டுவதற்காக இராயர் கிரீடம் எனப்படும் இரத்தின ஆபரணங்கள் இழைத்த வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றதையடுத்து அருள்மிகு மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்பது என்பது ஐதீகம். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திக் விஜயம் நடைபெற்றது. நாளை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை 28-ம் தேதியும், திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் மே1-ம் தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மதுரைநகர் எங்கும் விழா கோலம் பூண்டுள்ளது.