China retirement age: அதிகரித்து வரும் ஓய்வூதிய பட்ஜெட்டை கருத்தில் கொண்டு, அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு:

1950 களில் இருந்து முதன்முறையாக சீனா தனது நாட்டு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை படிப்படியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. வயதானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மக்கள்தொகை மற்றும் அதிகரிக்கும் ஓய்வூதிய பட்ஜெட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நீல காலர் வேலைகளில் உள்ள பெண்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதை 50 லிருந்து 55 ஆகவும், வெள்ளை காலர் வேலைகளில் உள்ள பெண்களுக்கு 55 லிருந்து 58 ஆகவும் உயர்த்துவதற்கான பரிந்துரைகளுக்கு உயர்மட்ட சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்களுக்கான ஓய்வுபெறும் வயது 60லிருந்து 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தற்போதைய ஓய்வுபெறும் வயது உலகிலேயே மிகக் குறைந்த வரம்புகளில் ஒன்றாகும்.

மக்கள் அதிருப்தி:

அடுத்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் அந்தந்த ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு, ஜனவரி 1, 2025 முதல் மாற்றம் தொடங்கும் என்று உள்ளூஉர் ஊடகங்கள் செய்தி வெளியுட்டுள்ளன. சட்டப்பூர்வ வயதுக்கு முன் ஓய்வு பெறுவது அனுமதிக்கப்படாது என்றும், மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2039 ஆம் ஆண்டுக்குள், அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு குறைந்தது 20 ஆண்டுகால பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும் போன்ற விதிகள் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ”அடுத்த 10 ஆண்டுகளில், நாங்கள் 80 வயது வரை ஓய்வு பெறுவதை தாமதப்படுத்தும் மற்றொரு மசோதா வெளியாகலாம்" என்று சீன சமூக ஊடக தளமான வெய்போவில் ஒருவர் எழுதியுள்ளார்.

காரணம் என்ன?

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வரும் சூழலில், வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு, கடந்த 1949-ல் 36 ஆண்டுகளாக இருந்த சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்த மக்கள்தொகையில் 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். அதேநேரம், கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை . இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு அந்நாட்டில் 60 வயதை கடந்தோரின் எண்ணிக்கை 25.4 கோடியாக இருந்தது. வரும் 2040ம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொண்டே, சீன அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆண்கள் 65 அல்லது 67 வயதில் ஓய்வு பெறுகிறார்கள், அதே சமயம் பெண்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.