தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். அதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 103 முதல் 105 டிகிரி வெப்பமானது பதிந்து வருகிறது. இதனால் மதியம் நேரம் பெரும்பலான சென்னை சாலைகள் வெறிசோடி காணப்படுகிறது. அதிலும் காலை 6 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க தொடங்கிவிடுவதால் பள்ளிக்கு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மாலை நேரத்தில் மழையானது கொட்டியது. இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. எனவே இன்றும் மழை பெய்யுமா என சென்னை மக்கள் காத்திருந்த நிலையில், வானிலை மையம் குட் நியூஸ் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றோடு மழை

திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல நாளை (12-06-2026) திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை மழை வாய்ப்பு தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆந்திர பகுதிகளில் நேற்றிரவு உருவான இடிமழை மேகங்கள் காரணமாக உருவான உயர் அடுக்கு மேகங்களால் வட தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொய்வடைவதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு (ஜூன் 14) வரை தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் (சென்னை உள்பட) & உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடி,மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழை பதிவாகும்.

சென்னையில் இன்று கொட்டப்போகுது மழை

சென்னையை பொறுத்தவரை இரவு மழை வர வேண்டுமானால் பிற்பகலில் மேகமூட்டம் விலகி வெயில் வர வேண்டும் என தெரிவித்துள்ள டெல்டா வெதர்மேன், அதே நேரம் பகலில் மழை வாய்ப்பு இல்லையெனவும், மாலை அல்லது இரவு மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்கும் மழைக்கு முன்னதாக தரைக்காற்று சற்று பலமாக வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.