8 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர்

சென்னை சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி , வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த வாலிபர், சிறுமியை மாடிக்கு தூக்கி சென்றுள்ளார். இதை பார்த்த மற்றொரு சிறுமி, தன் உறவினரிடம் கூறியதை அடுத்து அவர் மாடிக்கு சென்று பார்த்த போது போதை வாலிபர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. வாலிபரை பிடிக்க முயன்ற போது தப்பியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் போதை வாலிபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த நிஷாயுதின் ( வயது 30 ) என்பதும் கிழக்கு தாம்பரத்தில் தங்கி, ஸ்வீட் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. அவரை குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

நகைகளை திருடி அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர்

சென்னை திருவேற்காடு பெருமாள் அகரத்தை சேர்ந்தவர் வித்யா ( வயது 45 ) போரூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணி புரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி அவர் வேலைக்கு சென்றுள்ளார். மதியம், அவரது மகன் அரவிந்த் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிந்து 'சிசிடிவி' காட்சி வாயிலாக மர்ம நபர்களை தேடி வந்தனர்.இதில் திருவேற்காடைச் சேர்ந்த விஜய் ( வயது 26 ) பரத் ( வயது 22 ) ஆகிய இருவரை கைது செய்தனர். வித்யா வீட்டில் திருடிய நகையில் , 7 சவரனை நண்பர்கள் உதவியுடன் அடகு வைத்து அந்த பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்தது தெரிந்தது. நகையை அடகு வைக்க உதவிய திருவேற்காடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் நிர்மல்குமார் ( வயது 23 ) சிதம்பரத்தை சேர்ந்த காளிதாஸ் ( வயது 36 ) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய், பரத் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

தனியார் நிறுவனத்தில் , கலெக்சன் ஏஜென்ட் ரூ.6.47 லட்சம் மோசடி. நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு பதிவு செய்து கைது.

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் குமரேசன் ( வயது 52 ) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜன்டாக திருவொற்றியூரைச் சேர்ந்த தீபக் ( வயது 26 ) என்பவர் கடந்த 2023 - ம் ஆண்டு முதல் 2024 - ம் ஆண்டு வரை பணி புரிந்து வந்துள்ளார். அப்போது கடைகளில் வசூல் செய்த 6.47 லட்சம் ரூபாயை தீபக் நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நிறுவன மேலாளர் குமரேசன், 2025 ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை பதிந்து விசாரிக்கும் படி புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து , புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் தீபக் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தீபக்கை போலீசார் கைது செய்தனர்.