சென்னையில் இலவச வைஃபை, இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் , சிசிடிவி கேமராக்கள் மற்றும் குறைந்த சத்தம் போன்ற அம்சங்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசான தனியார் பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு - தனியார் இணைந்து சேவை :

இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மாநிலப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து, அதிக தேவை உள்ள வழித்தடங்களில் பிரீமியம் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

வருவாய் பகிர்வு மாதிரியின் கீழ் ( Revenue Share Model ), அரசுடன் தனியார் இணைந்து இயக்கக்கூடிய இந்த பிரீமியம் பேருந்துகள் MTCயின் டிப்போக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கட்டணத்துடன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் , இந்த தனியார் பேருந்துகள் MTC லோகோவையும் , தனியார் பேருந்துவின் லோகோவையும் கொண்டிருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது, 629 வழித்தடங்களில் 3,200 பேருந்துகளை MTC இயக்குகிறது. இதில், தோராயமாக தினசரி 32 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இறுதி கட்டம்:

இந்த பிரீமியம் பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தடங்கள் மற்றும் கட்டணம், எம்டிசியின் குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் கட்டணத்தை விட அதிகமாக இருக்குமா என்பது குறித்தான தகவல் கிடைக்கவில்லை.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இப்போது இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 2024 இல் மாநில சட்டமன்றத்தில், மாநிலப் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொதுப் போக்குவரத்திற்கான ஆதரவை அதிகரிப்பதற்கும் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் உயர்தர வசதிகளுடன் கூடிய பிரீமியம் பேருந்து சேவைகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.