மத்திய அரசின் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐஐஎம் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய 21 ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு கேட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 100க்கும் மேற்பட்ட ஐஐஎம் அல்லாத கல்வி மேலாண்மை நிறுவனங்களும் CAT மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.

நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வாக கேட் (CAT) தேர்வு உள்ளது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இருக்கும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

3 கட்டங்களாகத் தேர்வு

இந்த ஆண்டு ஐஐஎம் கோழிக்கோடு, கேட் தேர்வை நடத்துகிறது. பொது நுழைவுத் தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

பர்சன்ட்டைலாக மாற்றப்படும்

3 அமர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் நார்மலைஸ் ஆக்கப்படும். பிறகு அவை பர்சன்ட்டைலாக மாற்றப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, செப். 13ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில், தற்போது 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு குறித்த அறிவிக்கையை https://www.iimcal.ac.in/sites/default/files/2025-07/CAT-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.