பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள படம் 'கார் மேனி செல்வம்'. லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.

கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம்

கெளதம் மேனனிடம் கார் டிரைவராக வேலைப் பார்க்கிறார் சமுத்திரகனி. கைக்கு அடக்கமான சம்பளம் , மனைவி , மகன் என குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வாழ்க்கையே சமுத்திரகனி உடையது. ஒருகட்டத்தில் சமுத்திரகனியின் முதலாளியான கெளதம் மேனன் வெளி ஊருக்கு செல்கிறார். இந்த சமயத்தில் அவரது காரை கால் டாக்ஸியாக ஓட்டி கொஞ்சம் காசு பார்க்க நினைக்கிறார் சமுத்திரகனி. அதே நேரத்தில் மச்சானிடம் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவும் செய்கிறார். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பி சமுத்திரகனி எடுக்கும் முடிவுகள் அவரது நிம்மதியான வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே கார்மேனி செல்வம் படத்தின் கதை.

வி சேகர் படங்கள் தொடங்கி தற்போது குடும்பஸ்தன் வரை மிடில் கிளாஸ் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். எளிய குடும்பங்களின் கதைகளை கொண்டிருப்பதால் இந்த படங்கள் இயல்பாகவே பார்வையாளர்களுடன் உணர்வுப்பூர்வமாக உரையாடுகின்றன. அந்த வகையில் கார்மேனி செல்வம் திரைப்படம் அதே பிரச்சனைகளை பேசினாலும் மிக உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஓப்பன் செய்துவிட்டு அதனை திரைக்கதையில் கோர்வையாக சொல்ல கைவிட்டிருக்கிறார் இயக்குநர். தனது படங்களில் கருத்து சொல்லி போரடிப்பது போல் இல்லாமல் இப்படத்தில் ஒரு எளிய மிடில் கிளாஸ் குடும்பஸ்தனாக நடித்து அசத்தியுள்ளார் சமுத்திரகனி. அவரைக் காட்டிலும் அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியா ஒவ்வொரு நடுத்தர வீட்டில் உள்ள பெண்களை மிக தத்ரூரமாக பிரதிபலிக்கிறார். கெளதம் மேனன் மற்றும் அவரது மனைவியாக நடித்துள்ள அபிநயா ஆகியர்வள் நல்ல தேர்வு.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் எதார்த்தமான காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குடும்பத்துடன் ஒரு ஃபீல் குட் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு கார்மேனி செல்வம் ஒரு நல்ல சாய்ஸ் .