இந்திய நாட்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு முக்கியத் திட்டங்கள் எதுவும் புதிதாக அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறும்போது,

வேலையில்லாமல் இளைஞர்கள்,

உற்பத்தியில் வீழ்ச்சி

முதலீட்டாளர்கள் மூலதனத்தை வெளியே எடுக்கும் சம்பவம்,

வீட்டு சேமிப்பில் வீழ்ச்சி,

துயரத்தில் விவசாயிகள்,

உலகளாவிய அதிர்ச்சிகள்

அனைத்துமே புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவின் உண்மையான நெருக்கடிகளைக் கண்டும் காணாமல், பாதையைத் திருத்த மறுக்கும் பட்ஜெட் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மாற்றம் இல்லாத ஏமாற்றம்

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கூறும்போது, மாற்றம் இல்லாத ஏமாற்றம். பட்ஜெட்டில் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை தேர்தல் நேரத்தில்கூட பாஜக அரசு உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறும்போது, ‘’தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பிற்கான நிதியினைத் துளியும் ஒதுக்கீடு செய்யாமல் , தனது கைப்பாவைகளாக இருக்கும் சிபிஐ, ஈடி, வருமானவரித்துறை போன்ற துறைகளைக் கொண்டு அரசியல் கட்சிகளை மிரட்டி வளைத்தே தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்கலாம் என நினைக்கிறது ஒன்றிய அரசு. பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகளை அந்த மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்த மோடி அரசு தமிழ்நாட்டிற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனமில்லாமல் இருக்கிறது.

வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த பட்ஜெட்

தமிழ்நாட்டில் உறுதியாய் வெற்றி பெற மாட்டோம் என்கிற நம்பிக்கையில் தனது பலிவாங்கும் நடவடிக்கையை பட்ஜெட்டில் இருந்து துவங்கியுள்ளது பாஜக அரசு. வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த பட்ஜெட்’’ என்று சு.வெ. தெரிவித்துள்ளார்.