எரிபொருள் பற்றாக்குறையால், இங்கிலாந்து போர் விமானம் ஒன்று கேரளாவில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நிரப்பிய பின் விமானம் புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய எஃப்-35 போர் விமானம்

இங்கிலாந்தின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று, நேற்றிரவு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், எரிபொருள் குறைவாக இருந்ததாலேயே, அந்த போர் விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெல்த் ரக போர் விமானமான இது, இங்கிலாந்தின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ரைக் குழுவைச் சேர்ந்தது. இது இந்தோ-பசுபிக் பகுதியில் சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கூட்டு ராணுவ பயிற்சியை முடித்த நிலையில், விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டபோது, விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக அறிந்த விமானி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போர் விமானம் பாதுகாப்பாக தரைறிங்குவதற்காக, விமான நிலைய அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்தனர். பின்னர் அந்த விமானம் நேற்று இரவு 9.30 மணி அளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் வந்ததையடுத்து, விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஃப்-35 போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன.?

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த ஸ்டெல்த் ரக எஃப்-35 அதிநவீன 5-ம் தலைமுறை போர் விமானம் குறுகிய புறப்பாடு மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் வல்லமை படைத்தது.

குறைந்த நீளமுள்ள ரன்வேக்களிலில் இருந்து எளிதாக டேக் ஆஃப் செய்ய முடியும் என்பதால், பல்வேறு போர்க் கப்பல்களில் இருந்து இந்த போர் விமானத்தை இயக்க முடியும். எத்தகைய காலநிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட இந்த போர் விமானம், ரேடாரில் சிக்காத தன்மை கொண்டது. இதன் சூப்பர்சானிக் வேகம், அதிநவீன சென்சார் அமைப்பு, விமானப்படைக்கு பெரும் பலம் சேர்ப்பதாக அமையும்.

சர்வதேச அளவில் தற்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் இந்த அதிநவீன போர் விமானம் கேரளாவில் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எரிபொருள் பற்றாக்குறையாலேயே விமானம் தரையிறங்கியதாக விளக்கமளிக்கப்பட்ட நிலையில், மக்கள் நிம்மதி அடைந்தனர்.