மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நடவடிக்கையாக, முன்னணி நிறுவனங்களான ஓலா (Ola), உபர் (Uber) மற்றும் ராபிடோ (Rapido) ஆகியவற்றின் பைக் டாக்ஸி சேவைகளை அம்மாநில அரசு அதிரடியாகத் தடை செய்துள்ளது. விதிமுறைகளை மீறியதாகக் கூறி, இந்த மூன்று நிறுவனங்களின் தற்காலிக உரிமங்களையும் உடனடியாக ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

மின்சாரத்திற்குப் பதில் பெட்ரோல்?

மகாராஷ்டிர அரசு ஆரம்பத்தில் ஒரு முக்கியமான நிபந்தனையுடன் தான் இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மின்சார பைக் டாக்ஸிகளை (E-Bike Taxis) மட்டுமே இயக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனை. இருப்பினும், இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்சார பைக்குகளுக்குப் பதிலாக, பெருமளவில் பெட்ரோலில் இயங்கும் பைக்குகளை டாக்ஸிகளாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தை ஏமாற்றும் செயல் என்றும், விதிமீறல் என்றும் மாநில போக்குவரத்துத் துறை கருதுகிறது.

அரசின் கடுமையான நடவடிக்கைகள்

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் கீழ், ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற நிறுவனங்களின் தற்காலிக உரிமங்களை மகாராஷ்டிர அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது. தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஏற்கனவே ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும், நிறுவனங்கள் அதைச் செய்யத் தவறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளபடி, இறுதி வாய்ப்பாக மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; இந்த நேரத்திற்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவற்றின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும், இனி விதிகளுக்குப் புறம்பாக பெட்ரோல் பைக் டாக்ஸிகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், ஓட்டுநர் மீது மட்டுமல்லாமல் பைக் உரிமையாளர் மீதும் சட்டரீதியான வழக்குத் தொடரப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வாகனம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

யாருக்கு பாதிப்பு

அரசின் இந்த அதிரடி முடிவால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கி வந்த சட்டவிரோத பைக் டாக்ஸி சேவைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்தச் சேவையை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழலும் உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் மகாராஷ்டிராவில் பைக் டாக்ஸி சேவைகள் தொடர வேண்டுமானால், அவை முழுமையாக மின்சார வாகனங்களாக (EV) மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்தத் தடை குறித்து அந்தந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்யப் போகிறதா அல்லது அரசின் நிபந்தனைகளை ஏற்று மின்சார வாகனங்களுக்கு மாறப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.