இயக்குநர் இமயம் என்று போற்றப்பட்ட இயக்குநர் பாரதிராஜா இன்று உடல் நலக் குறைவால் காலமானார். 90களில் பிறந்து வளர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பாரதிராஜா படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பாரதிராஜாவை இயக்குநர் என்று அறிந்து வைத்திருந்தாலும் அவரது படங்களுடன் பெரியளவில் பரிச்சயமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். பாரதிராஜா என்கிற கலைஞரையும் தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை தெரிந்துகொள்வதற்கு அவரது படங்களே சிறந்த வழிகாட்டிகள். கிராமப்புற வாழ்க்கை, காதல், சமூக பிரச்சினைகள், மனித உணர்வுகள் என பல்வேறு பரிமாணங்களை அவர் தனது படங்களில் பதிவு செய்துள்ளார் பாரதிராஜா. ஜெஸ் ஸி தலைமுறையினர் நிச்சயம் தவறவிடக்கூடாத பாரதிராஜாவின் படங்களின் பட்டியல் இதோ

கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரதிராஜா இயக்கிய படங்கள்

16 வயதினிலே : பெரும்பாலான தமிழ் படங்கள் ஸ்டுடியோ செட் அப்களில் மட்டுமே எடுத்துவந்த காலத்தில் வெளியாகியது 16 வயதினிலே. இந்திய கிராமிய நிலப்பரப்புகள். அவற்றில் வாழும் தனித்துவமான குனாம்சங்களைக் கொண்ட மனிதர்களை வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு தனது முதல் படத்தில் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. ரஜினி , கமல், ஶ்ரீதேவி என மூன்று பெரிய ஸ்டார்களை தனது இயல்பாக தனது கதையுலகத்திற்குள் கொண்டு வந்தார். கிராமிய நிலப்பரப்புகளை காட்டுவதோடு மட்டுமில்லாமல் அவர்களின் மொழியையும் எதார்த்தமாக தனது கதைகளில் கொண்டுவந்தார் பாரதிராஜா.

கிழக்கே போகும் ரயில் : தனது கதைகளுக்கான முகங்களை தேடி பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அதில் பலர் இன்று சிறந்த நடிகர்களாக உருவெடுத்துள்ளார். அப்படி ராதிகா சரத்குமார் அறிமுகமாகிய படம் தான் கிழக்கே போகும் ரயில் . கிராமங்களில் நிலவும் அடக்குமுறைகள் , பழமைவாதங்களை எதிர்த்து போராடும் காதல் கதைகளையே தனது படங்களின் முக்கிய கருப்பொருளாக பாரதிராஜா கொண்டிருந்தார் .

சிகப்பு ரோஜாக்கள் : கிராமிய கதைகளை எடுப்பதில் தான் ஒரு சிறந்த கலைஞர் என்பதை பாரதிராஜா நீரூபித்துவிட்டார். ஆனால் தன்னை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் அடைத்துவிட முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் இயக்கிய படமே சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜாவின் வழக்கமான கிராமப் பின்னணியிலிருந்து விலகி உருவான சைக்காலஜிக்கல் த்ரில்லர். வித்தியாசமான கதையமைப்பால் அது அக்காலத்தில் பெரும் கவனம் பெற்றது.

புதிய வார்ப்புகள் : பாரதிராஜாவின் படங்கள் வெறும் கற்பனைகள் என்கிற அளவில் நில்லாமல் அன்றைய சமூக எதார்த்தத்தை பிரதிபலிப்பவை. சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக நிற்கும் இளைஞர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய படம்தான் புதிய வார்ப்புகள். புதுமையான கதையமைப்பால் அது தனித்த இடம் பெற்றது.

அலைகள் ஓய்வதில்லை : பாரதிராஜாவின் படங்கள் மக்களிடம் சேர்வதற்கு மிக முக்கியமான மற்றொரு காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. படம் பாடல் என அன்றைய இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படம் தான் அலைகள் ஓய்வதில்லை . நவரச நாயகன் கார்த்தி மற்றும் ராதா இருவரும் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

மண் வாசனை : நடிகர் பாண்டியன் அறிமுகமான படம் மண் வாசனை. திரையரங்குகளில் கிட்டதட்ட 250 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

முதல் மரியாதை : சிவாஜி மாதிரியான ஒரு மகா நடிகை வைத்துக் கொண்டு திருமணம் கடந்த உறவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்து அதை சூப்பர் ஹிட் ஆக்க முடியும் என்றால் அது பாரதிராஜாவால் தான். திருமணம் கடந்த உறவைப் பற்றிய படம் என்றாலும் அதனை விரசமில்லாமல் அழகியலோடு சொன்ன விதம் பாராதிராஜாவின் ஆளுமைக்கு ஒரு சிறந்த உதாரணம். இப்படத்தின் சில காட்சிகள் கி ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடலோரக் கவிதைகள் : முரட்டுத்தனமான இளைஞன் ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை மையமாகக் கொண்ட காதல் கதை. நடிகர் ராஜா மற்றும் ரேகா இந்த படத்தில் அறிமுகமானார்கள்.

வேதம் புதிது : சாதி மற்றும் சமூகப் பிரிவினைகள் குறித்து நேரடியாக கேள்வி எழுப்பிய துணிச்சலான திரைப்படம். தமிழ் சினிமாவின் முக்கியமான சமூகப் படைப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

என் உயிர்த் தோழன் : நட்பு, அரசியல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான திரைப்படம்.

கருத்தம்மா : தென் மாவட்டங்களில் சகஜமாக நடந்துவந்த பெண் குழந்தைக் கொலை போன்ற கடுமையான சமூகப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த படம். பொதுவாக சமூக பிரச்சனைகளைப் பற்றிய படம் என்றால் தனது மெசேஜை சொல்ல வேண்டும் என்கிற முயற்சியில் கதைசொல்லலில் கோட்டையை விட்டுவிடுவார்கள். ஆனால் எந்த விதமான கருத்தை சொல்ல வந்தாலும் அதனை ரத்தமும் சதையுமான கதையுடன் சொன்னவர் பாரதிராஜா.

அந்திமந்தாரை : வயதான இரு மனிதர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட படைப்பு. முதுமை, தனிமை மற்றும் மனித நேயத்தை பேசும் திரைப்படமாக இது தனித்துவம் பெற்றது.

இன்றைய தலைமுறையினர் இந்த படங்களை பார்க்கும்போது வெறும் பழைய திரைப்படங்களாக அல்லாமல், தமிழ் சமூகத்தின் மாற்றங்களையும், சினிமா எவ்வாறு வளர்ச்சி பெற்றதையும் புரிந்துகொள்ள முடியும். காதல், சமூகம், மனித உணர்வுகள் ஆகியவை காலம் கடந்தும் பொருந்தக்கூடியவை என்பதை பாரதிராஜாவின் இந்த படங்கள் இன்றும் நினைவூட்டுகின்றன.