Bengaluru Crime: பெங்களூருவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு, தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக திகழ்கிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள், பணி நிமித்தமாக பெங்களூருவில் தங்கி இருக்கின்றனர். ஆனால், அங்கு கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அந்த நகரில் இருந்தே வெளியேறிவிடலாமா? எனவும் பலர் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் தான், பொருளாதார ரீதியாக மட்டுமின்றி பாதுகாப்பிலும் பெங்களூரு மோசமானதாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அண்மையில் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்ற ஒரு பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள BTM layout பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் முழுமையாக பதிவாகி இருந்ததால், பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அம்பலமாகியுள்ளது.

A shocking case of sexual harassment on the street has emerged from the #BTMLayout in #Suddaguntepalya area of #Bengaluru, where a youth allegedly touched the private parts of a woman walking on the street on April 4.

The accused reportedly approached her from behind and behaved… pic.twitter.com/PqzDc9sMg8

— Hate Detector 🔍 (@HateDetectors) April 6, 2025

வீடியோவில் இருப்பது என்ன?

வீடியோவில், “வீடுகள் நிறைந்த ஒரு பகுதியில் உள்ள குறுகிய சாலையில் இரண்டு பெண்கள் நடந்து செல்கின்றனர். அடையாளம் தெரியாத இளைஞர் தங்களை பின் தொடர்ந்து வருவதை கண்டு அவர்கள் வேகமாக நடப்பது போல் தெரிகிறது. அப்போது திடீரென அந்த நபர் ஒரு பெண்ணை இழுத்து, அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். உடனிருந்த பெண் கத்தி கூச்சலிட்டு தனது தோழியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், தெருவில் சம்பவத்தின் போது அந்த மூன்று பேரை தவிர வேறு யாரும் இல்லாததால், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்கள், பின்பு மெல்ல சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து செல்வது” தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கடந்த நான்காம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காவல்துறை சொல்வது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் முன்வரவில்லை என்றால், முறையான புகாரைப் பதிவு செய்வதில் தாங்களாகவே நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியிருந்தது. இதுதொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

வாழ தகுதியற்ற நகரமா பெங்களூரு?

வருமானத்தை விட செலவை அதிகம் ஏற்படுத்தும் நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. அதன்படி அண்மையில் தான் பெங்களூருவில் டீசல் மற்றும் பாலின் விலை அதிகரித்தது. இதன் காரணமாக வாடகை கார்களின் கட்டணம் எகிறியது. சரி பைக் டாக்ஸியை பயன்படுத்தலாம் என்றால், விதிகளை மீறி செயல்படுவதாக பெங்களூருவில் பைக் டாக்ஸிக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மின்சார கட்டணம், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதனால் பெங்களூரு வாசிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வீடுகள் நிறைந்த பகுதியில் சாலையிலேயே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், பெங்களூரு மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.