ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில், சபலென்கா மற்றும் கீஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். உலகின் நம்பர் 2 வீராங்கனையான ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வீழ்த்தி கீஸ் நுழைந்துள்ளார்.

எளிதாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சபலென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டியில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள பெலாரஸை சேர்ந்த வீராங்கனை சபலென்காவுடன், தர வரிசையில் 11-ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டு வீராங்கனை படோஸா மோதினார். இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சபலென்கா, 6-2 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, நேர் செட்களில் படோஸாவை தோற்கடித்து, ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி

மற்றொரு அரையிறுதிப்போட்டியில், உலக தர வரிசையில் 2-ம் இடத்தில் உள்ள போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் 19-ம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசும் மோதினர். மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை, 7-5 என்ற புள்ளி கணக்கில் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன் பின்னர்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், திடீரென தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிய கீஸ், வெறித்தனமாக ஆடி, இரண்டாம் செட்டை, 6-1 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்றார். இதனால், ஆட்டம் மிகவும் சுவாரஸ்யம் அடைந்தது. மூன்றாவது செட்டில், இவருவரும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய நிலையில், 6-6 என்ற சம புள்ளிகளை எட்டி, அதன்பின் நடந்த போராட்டத்தில், 10-8 புள்ளிகளுடன், 7-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் மேடிசன் கீஸ்.

இதையடுத்து, நாளை(25.01.25) நடைபெறும் இறுதிப்போட்டியில், நம்பர் 1 வீராங்கனை சபலென்காவுடன், கீஸ் மோத உள்ளார். இதே வெறித்தனத்துடன் ஆடி, ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கீஸ் வெல்வாரா.? பார்க்கலாம்...