வன்னியர் சங்கம் சார்பில் இன்று மகாபலிபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை களைகட்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் மயமாக காட்சி அளிக்கிறது. மாநாட்டின் முகப்பில் லட்சக்கணக்கில் கூடும் வன்னியர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை முழுமையாக காணும் வகையில் 16 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

12 ஆண்டுகள் கழித்து வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ளதால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சம் பேருக்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும், மாநாட்டு குழு சார்பில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் இ.சி.ஆர். சாலையில் பக்கிங்காம் காலவாய் ஒட்டி 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 இடங்களில் விசாலமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட அன்புமணி

பாமக தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ், நேற்று நள்ளிரவு மாநாட்டை திடலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநாடு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததா என்பது குறித்து நிர்வாகிகளுடன் கேட்டு அறிந்தார். மேலும் கடைசி கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து மாநாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள மேடை, நாற்காலிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அன்புமணி ராமதாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கவனத்தை ஈர்த்த அன்புமணி ராமதாஸின் அக்னி கலச டாட்டூ

பொதுவாக அன்புமணி ராமதாஸ் எப்போதும் முழு கை சட்டையுடனே வலம் வருவது வழக்கம். நேற்று டீ சர்ட் உடன் வந்திருந்த அன்புமணி ராமதாஸ் கையில், அக்னி கலசம் பொறித்த டாட்டூ தெரிந்தது, இதைப் பார்த்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கூறுகையில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே, அக்னி கலசம் பொரித்த டாட்டூ போட்டுவிட்டார். மாநாட்டிற்காக அவர் இந்த டாட்டூ போடவில்லை, அன்புமணி ராமதாஸ் கையில் அக்னி கலசம் டாட்டூ இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் ஏராளமாக இருக்கிறது என விளக்கம் அளித்தனர்.