சமீபத்தில் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம் சென்ட்ரல் - தாம்பரம் இடையேயான அம்ரித் பாரத் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்ரித் பாரத் ரயில் சேவை

தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு வழித்தடங்களிலும் பல தரப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரங்களில் இயக்கப்படும் ரயில்கள் நள்ளிரவில் சேருமிடத்தை அடையாத வண்ணம் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அட்டவணை வடிவமைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் வண்டி எண் 16121/16122 தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சிக்கலாக இருக்கும் பயண நேரம்

இந்த அம்ரித் பாரத் ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமையில் சென்னை தாம்பரத்தில் இருந்தும், வியாழக்கிழமையில் திருவனந்தபுரத்தில் இருந்தும் வாராந்திர ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் டவுன், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேசமயம் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் முழுக்க முழுக்க சாதாரண படுக்கை வசதி கொண்டது. இதனால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வருவது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.இந்த கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அம்ரித் பாரத் ரயிலானது நாகர்கோயில் மார்க்கத்தில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் செல்வது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது.

காரணம் அங்கிருந்து பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை. ஆட்டோ, கார் ஆகியவை வாடகை இரண்டு மடங்கு நள்ளிரவில் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 3.30க்கு புறப்பட்டால் அதிகாலை 4 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அந்த நேரத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை அச்சமின்றி பயன்படுத்த முடியும். எனவே தயவு செய்து பயணிகள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.