ஊருக்கு உபதேசம் என்று கூறுவார்கள். அதாவது மற்றவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, அறிவுரை கூறுபவர்கள் அதை கடைபிடிக்காமல் இருப்பதைத் தான் இவ்வாறு கூறுவார்கள். அதேபோலத்தான் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயலும் பார்க்கப்படுகிறது. ஈரானை அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறிவிட்டு, அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த அணுகுண்டை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

புதிய அணு சக்தி ஒப்பந்தம் - ஈரானை மிரட்டி வரும் அமெரிக்கா

ஈரான் அணு ஆயுதங்களை அதிக அளவில் தயாரித்து வருவதாக எழுந்த புகாரையடுத்து, புதிய அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். அணு ஆயுத பரவல் சட்டத்திற்கு எதிராக ஈரான் செயல்படுவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யுமாறு ஈரானுக்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்திற்கு முதலில் பதிலளிக்காத ஈரான், தாக்குதல் நடத்தப்படும் என்ற ட்ரம்ப்பின் மிரட்டலையடுத்து, அது குறித்த நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், ஓமன் மூலம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் கூறியது. மேலும், ட்ரம்ப்பின் உத்தரவுகளுக்கெல்லாம் அடிபணிய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இதையடுத்து, பல வகைகளில் ஈரானை மிரட்டி வந்தார் ட்ரம்ப். இந்நிலையில், புதிய அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 12-ம் தேதி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா சார்பில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பும், ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சியும் பங்கேற்றனர்.

இருநாடுகளுக்குமிடையே மத்தியஸ்தராக செயல்பட்ட ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சரின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால், தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா தயாரிக்கும் சக்திவாய்ந்த அணுகுண்டு ‘B61-13‘.?

இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்கா சக்திவாய்ந்த அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி61-13 என்ற பெயர் கொண்ட அந்த அணு ஆயுதத்தை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என தெரிகிறது. தற்போது, உலகில் பல்வேறு போர்கள் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக, அதன் அணுசக்தித் திறனை வலுப்படுத்தும் விதமாகவும், பழைய அணு ஆயுதத்தை புதுப்பிக்கும் விதமாகவும் இந்த பி61-13 அணு ஆயுதம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அணு ஆயுதம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய ‘லிட்டில் பாய்‘ அணுகுண்டு ஏற்படுத்திய அழிவைவிட, 24 மடங்கு அதிக அழிவை இந்த அணுகுண்டு ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பி61-13 அணுகுண்டு, கிராவிட்டி, அதாவது ஈர்ப்பு விசையை பயன்படுத்தி இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

உலகமெங்கும் போர் சூழல் பெருகிவரும் நிலையில், அமெரிக்கா இத்தகைய அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க உள்ள தகவல், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என கட்டுப்படுத்தும் அமெரிக்கா, இத்தகைய செயலில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.