Amaran : அமரன் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கிறது ..எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்

1 year ago 8
ARTICLE AD

அமரன்

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நிஜாம் முகைதீன் அமரன் படத்தில் இஸ்லாமியர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து தனது கண்டத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அமரன் திரைப்படம்

"சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது. தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு மரணத்தை உணர்வுப் பூர்வமாக சொல்கிறோம் என்கிற பெயரில், தொடர்ந்து ஓர் சமூகத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிப்பது என்பது வேதனையியின் உச்சமாகும். திரைத்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய வெறுப்பை விதைக்கும் செயல் ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது.

தேச விடுதலைப் போராட்டத்தின் வீரமிக்க முழக்கமாகவும், ஜனநாயக போராட்டக் குரல்களின் மூச்சாகவும் இருந்த ஆஸாதி முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாகவும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பஜ்ரங்தள் போன்ற மதவாத அமைப்புகளின் ஜெய் பஜ்ரங்பலி கோஷத்தை தேசப்பக்தி கோஷமாகவும் இப்படம் காட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தால் காஷ்மீர் மக்கள் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள், சொல்லொனா துன்பங்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது.  பாதுகாப்பு படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட கணவன் இறந்துவிட்டானா இல்லையா என்றுகூடத் தெரியாமல், அரை விதவைகளாக வாழும் காஷ்மீர் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், காஷ்மீர் ஆண்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களது மனைவிகளை விட்டுச் சென்றதால் தான் அங்குள்ள பெண்களில் அதிகமானோர் அரை விதவைகளாக இருப்பதாக திரைப்படம் காட்டியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, வடிகட்டிய பொய் பிரச்சாரமுமாகும்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியே இந்த அமரன் திரைப்படம். பொதுப்புத்தியில் தவறான எண்ணங்களை விதைத்த காஷ்மீர் ஃபைல்ஸ் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படமோ, அதே அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படம்தான் இந்த அமரன் திரைப்படமும்.

ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டாவே அமரன் திரைப்படமாகும். ஒருவரை ஹீரோவாக காட்ட, இத்திரைப்படம் ஒரு சமூகத்தையே பிரிவினைவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளது. அதேபோல் சங்பரிவாரத்தின் எண்ணத்தை தேசபக்தி என்ற போர்வையில், முஸ்லீம்களை தேசவிரோதிகளாகவும் காட்டியுள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு உச்சத்தின் எச்சமாக உள்ளது அமரன் திரைப்படம்.

வெறுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அல்லது திணிக்கப்பட்டாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக முதல்வர் அவர்கள் இந்த படத்தை பாராட்டியிருப்பது ஏற்புடையதல்ல. இந்த படத்தை பாராட்டி  ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக் குரல்களை அவர் மௌனியாக்கி  விட்டார் என்றே தோன்றுகிறது. இது ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற வெறுப்பை திணிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக தங்களது குரல்களை வலுவாக எழுப்ப வேண்டும். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்." என அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது

Read Entire Article