தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. அந்த வகையில் இன்று அதிமுக மற்றும் பாமக கூட்டணி உருவாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி - TN NDA ALLIANCE

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், வடதமிழ்நாட்டில் வலுவாக இருக்கக்கூடிய பாமக இணைந்திருப்பது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து உள்ள நிலையில், வடதமிழ்நாட்டை சேர்ந்த அதிமுகவினர் கருத்து என்ன என்பது தெரிந்து கொள்ள அவர்களிடம் பேசினோம்.

அதிமுகவினர் கருத்து என்ன ?

அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து அதிமுகவினர்களும் பேசுகையில், வடதமிழ்நாட்டில் தொடர்ந்து பலமாக இருக்கக்கூடிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு அவர்கள் தனித்து நின்ற போதும், பல தொகுதிகள் இரண்டாம் இடம் வந்திருந்தனர். வடதமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் 15 முதல் 25 சதவீத வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி வைத்திருக்கிறது. தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் இதைவிட கூடுதலான வாக்குகளும் பாமக வைத்துள்ளது.

தமிழக முழுவதும் பாமகவின் வாக்கு வங்கியை வைத்துப் பார்த்தால் 5% முதல் 6% தான் இருக்கும். ஆனால் வடதமிழ்நாட்டில் இருக்கும் 90 தொகுதிகளிலும், மேற்கு மற்றும் டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தொகுதிகளிலும் பாமகவிற்கு கணிசமான செல்வாக்குகள் இருக்கின்றன. இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை பாமக தான் முடிவு செய்ய வேண்டும்.

பாமகவின் பாக்கெட் வாக்குகள்

பாமகவிடம் "பாக்கெட் வாக்குகள்" என சொல்லக்கூடிய ஒரு பூத் முழுவதும் பாமகவிற்கு வாக்களிக்கும் பல கிராமங்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் பாமகவிற்கு அந்த வாக்குகள் கிடைத்திருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு பெரிதும் உதவியது. 2019 இடைத்தேர்தலிலுமே பாமகவின் வாக்குகள் அதிமுகவிற்கு பலமாகவே இருந்தது. அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு இயற்கையாக டிரான்ஸ்பர் செய்ய முடிகிறது.

திமுகவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு ஆவணங்களை வெளியிடுவதிலும், பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் அன்புமணி தீவிரமாக இருந்து வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி பிரச்சாரம் மேற்கொள்வது, வடதமிழ்நாட்டில் எங்களுக்கு பலமாகவே இருக்கும். 2021 தேர்தலில் நாங்கள் ஆளும்கட்சியாக தேர்தலை சந்தித்து இருந்தோம், இப்போது எதிர்க்கட்சியாக சந்திப்பதால் கூடுதலான வாக்குகள் எங்கள் கூட்டணிக்கு கிடைக்கும். இதன் மூலம் பாமக - அதிமுக கூட்டணி வடதமிழ்நாடு மற்றும் மேற்கு பகுதிகளில் பெரும் அளவு வெற்றி பெறும்.

அதிமுக மற்றும் பாமக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது. வடதமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில நகரங்களில் பாஜகவிற்கும் செல்வாக்கு இருக்கிறது. மேலும் எங்கள் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருப்பதால், வாக்கு வங்கி அடிப்படையில் மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இது எங்களது தொண்டர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும். எங்களது எதிர்பார்ப்பை எங்களது, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தனர்.