2026 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தான் வருத்தத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகையும், அதிமுக நிர்வாகியுமான கௌதமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதி

2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்துள்ளது. இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டையும் முடித்துள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் அதிமுக கூட்டணியில் ராஜபாளையம் தொகுதி இந்த முறை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 2021 தேர்தலில் அங்கு போட்டியிட்ட நிலையில் இம்முறை சிவகாசி தொகுதிக்கு மாறியுள்ளார்.

காத்திருந்த கௌதமி கிடைத்த அதிர்ச்சி

இதனிடையே நடிகையும், அதிமுக பிரமுகருமான கௌதமி கடந்த முறையே பாஜகவில் இருந்தபோது ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். அந்த தொகுதியில் அவர் சார்ந்த சமூக மக்கள் அதிகளவில் உள்ளதால் மிகப்பெரிய அளவில் களப்பணிகளும் மேற்கொண்டு வந்தார். இதனிடையே தான் 2024ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீட்டில் நான் "*வருத்தத்தில் உள்ளேன்* என்பது போன்ற செய்தி என் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு *வதந்தி* மட்டுமே என்று நான் திட்டவட்டமாக கூறுகிறேன், இந்த தேர்தல் நேரத்திலும் ஒருசில நபர்கள் உண்மையிலேயே வேலையில்லாமல் உள்ளனர் என்ற…

— Gautami Tadimalla (@gautamitads) March 26, 2026

இந்த முறையும் அதிமுகவில் கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கௌதமி வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. அதனை அவர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீட்டில் நான் வருத்தத்தில் உள்ளேன் என்பது போன்ற செய்தி என் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு வதந்தி மட்டுமே என்று நான் திட்டவட்டமாக கூறுகிறேன், இந்த தேர்தல் நேரத்திலும் ஒருசில நபர்கள் உண்மையிலேயே வேலையில்லாமல் உள்ளனர் என்ற முடிவுக்கு மட்டுமே வர முடியும். மிகவும் அவசியமான ஆட்சி மாற்றத்தை கொண்டு வர இந்த தேர்தலில் செயல்படுகளிலேயே எனது முழு கவனமும் உள்ளது மற்றும் எமது பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என கௌதமி தெரிவித்துள்ளார்.