இரண்டாவது திருமணம் பற்றி வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது என் பொறுமையை இழக்க நேர்கிறது என நடிகை மீனா காட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, இன்றளவும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று பாதிப்பால் வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரிடையேயும், தமிழ் சினிமா ரசிகர்களிடத்திலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

கணவர் மறைவுக்குப் பின் சில காலம் வெளியுலகில் தலை காட்டாத மீனா அதன்பின் மீண்டும் சினிமா பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாகவே வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக அரசியல், சினிமா பிரபலங்களுடன் அவர் தொடர்புபடுத்தி வெளிப்படையாக பேசப்பட்டது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

என்னனாலும் எழுதுவீங்களோ?

ஆரம்பத்தில் இருந்தே இதற்கு மீனா தரப்பில் எவ்வித பதிலும் வராத நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் காட்டமாக பதிலளித்துள்ளார். அதில், “என்னை வைத்து ஏற்கனவே சர்ச்சையாக பல விஷயங்களை எழுதுகிறார்கள். சமீபகாலமாக எனது இரண்டாவது திருமணம் பற்றி அனைவரும் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். ஒரு காரணம் இருந்தால் அல்லது என் வாழ்க்கையில் அப்படி யாராவது இருந்தால் அவர்கள் ஏதாவது எழுதினாலும் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இது அப்படியல்ல. நான் ஒரு பிரபலம், ஒரு பெண், கணவனை இழந்து தனியாய் வாழ்ந்து வரும் பெண் என்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா என தெரியவில்லை. அது என் பொறுமையை இழக்க காரணமாக அமைந்தது.

எனக்கும் கோபம் ரொம்ப வரும். எனக்கு 2வது திருமணம் என பரவும் வதந்திகள் என்னைய ரொம்பவே காயப்படுத்துகிறது. இதற்கு முன்னால் என்னை பற்றிய வதந்திகள் எனக்கு தெரிய ரொம்ப லேட்டாகும். ஆனால் இப்போது சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயம் வந்து விட்டால் அது பெரிதாகி, சீக்கிரமாவே தெரிந்து விடுகிறது.கேட்பதற்கு ஆள் இல்லை என்று இப்படி பண்றீங்களா?. என் நேரத்தையும், ஆரோக்கியத்தையும், சக்தியையும் எதிர்மறையான விஷயம் ஒன்றிற்காக வீணாக்க விரும்பவில்லை.

அதேசமயம் என் விலைமதிப்பற்ற நேரத்தையும், ஆரோக்கியத்தையும், எண்ணங்களையும் தவறான, கெட்ட அல்லது தேவையற்ற ஒன்றிற்காக வீணாக்க முடியாது. நான் மிகவும் நேர்மறையான பெண். எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கவும், நேர்மறையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்” என மீனா கூறியுள்ளார்.