அதிமுகவில் இருந்து அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆட்டம் காணும் அதிமுக - சிக்கலில் இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி கண்டது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றது. அதில் அதிமுக மட்டும் 47 இடங்களில் வென்றது. இந்த தேர்தல் தோல்வி அதிமுகவின் எதிர்காலத்திற்கு அபாய மணியாக மாறியுள்ளது. அதிமுகவில் ஜெயித்த எம்.எல்.ஏ.,க்கள் இரு தரப்பாக பிரிந்தது, 4 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது, தனக்கு எதிரானவர்களின் பதவிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி பறித்தது என அக்கட்சி தொடர்ச்சியாக அடிமேல் அடிவாங்கி வருகிறது.

கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்

இப்படியான நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி தமிழக வெற்றிக் கழகம் அல்லது திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். நிர்வாகிகளோடு ஆதரவாளர்களும் செல்வதால் கட்சியில் மீதமிருப்பவர்கள் தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கையை நினைத்து கலங்கி போயுள்ளனர். இந்நிலையில் நடிகை கௌதமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகை கௌதமி விலகல்

அவர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இன்று ஜூன் 14ம் முதல் நான் வகித்து வரும்
அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

பாஜக டூ அதிமுக.. அடுத்து என்ன?

நடிகை கௌதமி பல ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றிய நிலையில் அவருக்கு 2021ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் சீட் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்த தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றிய நிலையில் கடைசி நேரத்தில் சீட் இல்லை என மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அதிருப்தியடைந்த கௌதமி, 2024ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கௌதமிக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து அவர் விலகியுள்ளார். அடுத்ததாக கௌதமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.