உடல் நலக்குறைவால் மறைந்த நடிகர் அபிநய் சினிமாவில் சறுக்கிய காரணத்தை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக துள்ளுவதோ இளமை படத்தில் இரண்டாம் ஹீரோவாக நடித்த அபிநய் உயிரிழந்தார். முன்னதாக உடல் நலம் குன்றி இருந்தபோது அவருக்கு தனுஷ், கேபிஒய் பாலா உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். எனினும் குணப்படுத்த முடியாத நோய் என்பதால் அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 10ம் தேதியான இன்று காலமானார். அபிநய் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அபிநய் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில், “துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூம், அபிநய்யும் இணைந்து நடித்தனர். சினிமாவில் யாருக்கு எப்போது உயர்வு, என்ன மாதிரியான வாழ்வு வரும் என சொல்ல முடியாது. இன்றைக்கு தனுஷ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறி ரூ.200 கோடி சம்பளத்துடன் போயஸ் கார்டனில் வீடு வாங்கும் அளவுக்கு சென்று விட்டார். அவர் ஒரு திறமையான நடிகர். அபிநய் ரூ.2 கூட இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாக தனது பேட்டிகளில் சொன்னார்.

சினிமா என்பது மாய உலகம். இங்கு சில விஷயங்கள் ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு பதிலே கிடையாது. தனுஷ் துள்ளுவதோ இளமைக்குப் பின் அவர் தேர்வு செய்த படங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துக் கொண்டார். இன்றளவும் அவரின் காதல் கொண்டேன் படத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதேபோல் திருடா திருடி படத்தில் மன்மத ராசா படம் அவரின் உயரத்தை எங்கேயோ கொண்டு சென்றது. நடுவில் சில படங்களில் சறுக்கினாலும் அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பரிணாமங்கள் உள்ளது. அப்படி பார்க்கும்போது அபிநய் துள்ளுவதோ இளமை படத்துக்குப் பின் ஜங்ஷன் என்ற படத்தில் நடித்தார். கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திய அவர் சரியான தேர்வு இல்லாமல் போய்விட்டது. அப்படி தேடிப்போன படத்தில் எது நல்ல படம், எந்த இயக்குநர் இதனை செய்கிறார் போன்றவற்றை பார்க்க வேண்டும்.

அபிநய் விஷயத்தில் நாம் உதாரணமாக அப்பாஸை சொல்லலாம். அவர் எப்படிப்பட்ட நடிகராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் தேர்வு செய்த படங்கள் எல்லாம் எதிராக இருந்தது. ஒரே காலக்கட்டத்தில் 23 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டார். நிதானம் இல்லாமல் சினிமா போதையில் சறுக்கினார். அப்படிப்பட்ட ஒருவர் தான் அபிநய்.

அபிநய்யின் ஜங்ஷன் படம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அதுவே அவரின் உயரத்தை தலைகீழாக மாற்றியது. அட்வான்ஸ் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பின்வாங்கி விட்டார்கள். எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. விளம்பரங்களில் அபிநய் நடிக்க தொடங்கிய நிலையில் அதற்காக வழங்கப்பட்ட சம்பளம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக பயன்பட்டதே தவிர பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. படம், விளம்பரம் எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் மதுவுக்கு அடிமையாகி விட்டார். ஆனால் அபிநய் வேறு மாதிரியான முடிவெடுத்து முயற்சித்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.