பொதுவாகவே திரை நட்சத்திரங்களின் ஹோம் டூர் எல்லாமே இண்டெர்நெட்டில் பயங்கர வைரலாகும். அதைப்போலவே கட்சி சார்பைத் தாண்டியும் தங்களின் ஆளுமையால் கவர்ந்த அரசியல்வாதிகளின் ஹோம் டூரும், தனி நேர்காணல்களும் எல்லோராலும் கவனிக்கப்படும். அதைப்போலவே கலாட்டா யூ ட்யூப் சேனல் தற்போது, திமுக எம்.பி ஆ ராசாவை எடுத்த நேர்காணலும் வைரல் ஹிட் அடிக்கிறது. அதில் ஆ ராசாவால் பகிர்ந்துகொள்ளப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.

மறைந்த அவரது துணை பரமேஸ்வரி குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் புகைப்படமாக இருக்கிறார். அவர் இருப்பதாக நினைத்துக்கொள்வது மூடநம்பிக்கைதான். ஆனால் என் மனதிடத்துக்காக ஒளியாக இருந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் இறந்தபோது நான் உடைந்துவிட்டேன். படிப்பும், வெளியுலக பரிச்சயமும் அறிந்த என் மகள்தான் என்னைத் தேற்றினார். என் துணைவியார் என் வீட்டில் காட்டிய அக்கறையை, காத்த சுற்றங்களை இப்போது என் மகள் கையாள்கிறார். அவர் என் பெருமை” என்றார்.

உடல்நலம் குறித்து கேட்கப்பட்டபோது, “2ஜி வழக்கு மிகுந்த அயர்ச்சியை, அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. அதிலேயே உடல்நல கெடுதல் வந்துவிட்டது. தொண்டர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, அன்புமிகுதியில் இறைச்சி விதவிதமாக போட்டி, மூளை, வறுவல் போட்டுவிடுவார்கள். அவர்கள் அன்புக்காக அனைத்தையும் சாப்பிட்டுவிடுவேன். ஆனால் நிச்சயம் மறுநாள் அதற்கான உடற்பயிற்சியை மேற்கொள்வேன். கலோரியை கணக்கில் எடுத்து அடுத்தநாளே உடற்பயிற்சியில் அதை சமன்செய்வேன். கலைஞரிடம் இருந்துதான் உடலைப் பேணும் இந்தப் பண்பை நான் கற்றுக்கொண்டேன்” என்றார்