தஞ்சாவூர்: தஞ்சை அருகே எட்டு வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தை சேர்ந்த ஒரு கிராமப்பகுதியில் வசிப்பவர் அஸ்லம்கான் (70). சம்பவத்தன்று அஸ்லம்கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயதான பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி அவருடைய பெற்றோரிடத்தில் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், முதியவர் அஸ்லம் கான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி ஆனது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஸ்லம் கானை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதேபோல்தான் தஞ்சாவூர் அருகே ஒரு கிராம பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி என்பவரின் மகன் கண்ணன் (30). இவர் கடந்த 11ம் தேதி தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த மூணாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது பைக்கில் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து வந்துள்ளார்.

பின்னர் பள்ளிக்கு செல்லாமல் அப்பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் கண்ணனை பிடித்து விசாரணை செய்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இவரையும் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அவர்களை கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். இதனால் சிறுமிகள் அச்சமடைந்து தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை வெளியில் சொல்லாமல் மறைக்கின்றனர். தற்போது பள்ளிகள்தோறும் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சிறுமிகள் தங்களுக்கு இதுபோன்று சம்பவங்கள் நடந்தால் உடன் பெற்றோர்களிடத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.