ARTICLE AD
சென்னை வானிலை மைய கூடுதல் இயக்குநர் பி. அமுதா செய்தியாளர்களை சந்தித்து வானிலை நிலவரம் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, காலை நிலவரப்படி அதிகபட்சமாக கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷவந்தியத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. மே 19, 20 ஆகிய இரு நாள்களுக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி. சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா, குமரி கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 55 கிமீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கோடை மழை 192.7 மிமீ மழை அளவு பெய்துள்ளது. சராசரி நிலையை விட 90 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று கூறினார்.
